கோவை:கோவை மாவட்ட தொழில் மையம் மூலமாக, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் கடனுதவி பெற்ற, கோவை விளாங்குறிச்சியை சேர்ந்த, பெண் தொழில் முனைவோர் சித்ரலேகாவை தொடர்பு கொண்டு, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சித்ரலேகா, ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி நிலையத்தை நடத்தி வருகிறார். அவர், தொழில் துவங்குவதற்கு கடன் கேட்டு, மாவட்ட தொழில் மையத்தை அணுகியுள்ளார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக, தொழில் முன்னோடிகள் திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருப்பதாக, அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். விண்ணப்பம் கொடுத்ததும், நேர்முகத் தேர்வு நடத்தி, மானிய கடனாக ரூ.68.37 லட்சம் வழங்கப்பட்டது.வங்கி கடனில், 35 சதவீதம் மானியம், ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் கடன் தவணை தொகையில், 6 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.மானியத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. கம்பெனி ஆரம்பித்து, ஆறு மாதங்களாகிறது. ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மற்றும் காற்றாலை உதிரி பாகங்கள் தயாரிக்கப்படுகிறது.
'மகிழ்ச்சியாக இருக்கிறது'
முதல்வருடன் உரையாடியது தொடர்பாக, சித்ரலேகா கூறுகையில், ''மாவட்ட தொழில் மையம் எவ்வாறு உதவி செய்தது; திட்டம் பயனுள்ளதாக இருக்கிறதா என முதல்வர் கேட்டறிந்தார். என்னை போன்றவர்களுக்கு இதுபோன்ற திட்டம் வரப்பிரசாதம். திட்டத்தை துவங்கியதோடு, பயனாளிகளை தொடர்புகொண்டு, அதன் பயனை தெரிந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது,'' என்றார்.