உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நல்லா இருந்த ஊரும்... நாறிப்போன ரோடுகளும்! பாடாய்படுத்தும் பாதாள சாக்கடை திட்டம்; 170.22 கோடி ரூபாய் நிதி வீணாக போனதா?

நல்லா இருந்த ஊரும்... நாறிப்போன ரோடுகளும்! பாடாய்படுத்தும் பாதாள சாக்கடை திட்டம்; 170.22 கோடி ரூபாய் நிதி வீணாக போனதா?

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டத்தில், நாளுக்கொரு பிரச்னைகள் எழுந்து வருகின்றன. இதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.பொள்ளாச்சி நகராட்சி, 13.87 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டுள்ளது; மொத்தம், 36 வார்டுகளை உள்ளடக்கியது. நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், 109.62 கோடி ரூபாயில் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.அதில், ஜெர்மன் மேம்பாட்டு வங்கி நிதி வாயிலாக கடன், 10.54 கோடியும், மானியம், 21.09 கோடியும், ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு நிதி வாயிலாக, 67.45 கோடி ரூபாய் மற்றும் உள்ளாட்சியின் பங்களிப்பு, 10.54 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டது.

இது தான் திட்டம்

கடந்த, 2016ம் ஆண்டு, அக்., 13ம் தேதி பணி துவங்கப்பட்டது.இந்த திட்டத்தின் கீழ், நகராட்சி ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.திட்டம் செயல்படுத்தும் போது, அனைத்து கழிவுநீரும் பாதாள சாக்கடையில் செல்லும், மழைநீர் மட்டுமே தற்போதுள்ள சாக்கடையில் செல்லும் என, தெரிவிக்கப்பட்டது.இதற்காக, கழிவுநீர் சேகரிப்பு குழாய்கள், 200 மி.மீ., முதல், 600 மி.மீ., வரை விட்டமுடைய சுடுமண் மற்றும் கான்கிரீட் குழாய்கள், 165 கி.மீ., நீளத்துக்கு அமைக்கப்பட்டது; 7,400 எண்ணிக்கையில் ஆள் இறங்கு குழிகள் அமைக்கப்பட்டது.இத்திட்டத்துக்கு, மூன்று கழிவுநீர் உந்து நிலையங்கள், 18 கழிவு நீரேற்று நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.கழிவு நீர் உந்து மற்றும் கழிவு நீரேற்று நிலையங்களில் சேகரிக்கப்படும் கழிவுநீர், 17.195 கி.மீ., நீளம், 150 மி.மீ., முதல், 400 மி.மீ., விட்டமுள்ள வார்ப்பு இரும்பு குழாய் வாயிலாக, மாட்டு சந்தை அருகே உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.சுத்திகரிப்பு நிலையம், தொடர் தொகுதி உலை தொழில்நுட்ப முறையில் அமைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையத்தில் தற்போது, தினமும், 1.125 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்படுகிறது.

கூடுதல் நிதி

இப்பணிக்காக கூடுதல் நிதியாக, 60.60 கோடி ரூபாய் மூலதன மானிய நிதியின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தம், 170.22 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது,20 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்புகள் கொடுக்கும் பணிகள் நடக்கின்றன. இத்திட்ட பணிகள் நிறைவடைந்ததாக கூறி கடந்தாண்டு மே மாதம் துவங்கப்பட்டது.

ஆரம்பம் முதல்...

பொள்ளாச்சியில், ஏழு ஆண்டுகள் நடந்த ஒரே திட்டப்பணி இதுவாகத்தான் இருக்கும். ஆனால், இதுவரை வீட்டு இணைப்புபணி முழுமையாக நிறைவு பெறவில்லை. இத்திட்டம் துவக்கம் முதல், இதுவரை பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள் சேதமடைவது; ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவது என, பிரச்னைகள் பட்டியலிட்டு கொண்டே செல்லும் அளவுக்கு உள்ளன.ஆள் இறங்கும் குழிகளில் இருந்து, வீட்டு இணைப்பு வழியாக, கழிவுநீர் 'ரிட்டன்' ஆகி வீட்டில் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் ரோட்டில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இது போன்ற பிரச்னைகளால், மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

ஒன்றா... ரெண்டா!

ஜோதிநகர் அருகே, மாக்கினாம்பட்டி செல்லும் ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள் எல்லாமே மோசமாக இருப்பதுடன், தோண்டப்பட்ட ரோடு இன்னும் சீரமைக்கப்படாமல் குழியும் மேடாக காட்சியளிக்கிறது. பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் ரோட்டில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளை, மூடி தார் ரோடு போடப்பட்டுள்ளது.ராஜாமில் ரோட்டில் உள்ள குழிகள் மோசமாக உள்ளன. அடிக்கடி கழிவுநீர் வெளியேறிய இடம், தோண்டப்பட்ட பகுதிகளில் முழுமையாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளது.நியூஸ்கீம் ரோட்டில் மழைக்காலங்களில் கழிவுநீர் வெளியேறி, ரோட்டில் செல்வதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், மக்கள் அதை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.சாம்பமூர்த்தி நகர் உள்ளிட்ட நகரின் பல இடங்களில் கழிவுநீர் வெளியேறும் குழிகளாகவே, ஆள் இறங்கும் குழிகள் மாறியுள்ளன.நகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், மாறி, மாறி குறைகளை கூறிக்கொள்வதை கைவிட்டு, ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்வு தேவை

அ.தி.மு.க., ஆட்சியில் இதற்கான கூட்டங்கள் நடத்தினாலும்; அதில் எடுத்த முடிவுகள் செயல்படுத்தவில்லை. ஆரம்ப கட்டத்தில் பிரச்னைகளை சரி செய்யாமல் பணிகளை மேற்கொண்டதே தற்போதைய பிரச்னைக்கு அடித்தளமாக உள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க.,வைச்சேர்ந்த கவுன்சிலர்கள், 'இது அ.தி.மு.க., ஆட்சியில் வந்த திட்டம்; குளறுபடிகள் நிறைய உள்ளன,' என்ற குற்றச்சாட்டை மட்டுமே தெரிவித்து வருகின்றனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண என்ன செய்யலாம் என்பது குறித்த திட்டமிடல் இல்லை. இதனால், மக்களிடையே அதிருப்தி தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குழு அமைத்து ஆலோசிக்க வேண்டும்!

நகராட்சி பகுதியில் பல்வேறு குளறுபடிகளுடன் பாதாள சாக்கடை திட்டம்அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பலனை கொடுக்காமல் போய்விடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறைகளை கூறிக்கொண்டே இருக்காமல், தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.பிரச்னைகளை தீர்க்கஅதிகாரிகள், தொழில்நுட்ப ஆலோசனைகளை பெற வேண்டும்.சிறு அளவிலான குழாய்களுக்கு மாற்றாக கழிவுநீர் முறையாக செல்லும் வகையில் இரும்பு குழாய்களை அமைக்கலாம்.வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்படும் போது, தரமாக பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். சேதமடைந்த ஆள் இறங்கும் குழிகளை கணக்கெடுத்து அவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகரின் துாய்மையை பாதுகாக்க, குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் கொண்ட குழுக்கள் அமைத்து, ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை