| ADDED : ஜூலை 21, 2024 12:59 AM
கோவையில் நடந்த அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில், விவசாயிகளின் கூட்டத்துக்கு நடுவே, டிரோன் குறித்து அழகாக விளக்கிக் கொண்டிருந்தார் கோவையின் முதல் பெண் டிரோன் பைலட் ஸ்ரேயவர்தினி.'பரவாயில்லையேம்மா... நல்லா விளக்கம் கொடுத்தீங்க' என்று, விவசாயிகள் பலரின் சர்ட்டிபிகேட், அவரை இன்னும் உற்சாகமாக்கியது.அவரிடம் பேசினோம்...!கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் இவர். இவருடைய பெற்றோர் கணேஷ் - கலாதேவி. மத்திய பிரேதசத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பிளஸ் 2 முடித்து வந்தவர், கோவையில் கல்லுாரி படிப்பு முடித்தார். இவர், துடியலுாரில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில், 6 மாத கால ட்ரோன் படிப்பில் சேர்ந்தார்.பின், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள, 'சென்டர் ஆப் ஏரோஸ்பேஸ் ரிசர்ச்' என்ற இன்ஸ்டிடியூட்டில், சிறியது முதல் பெரியது வரை இருக்கும், ட்ரோன் செயல்பாடு குறித்து 10 நாள் பயிற்சி முடித்தார்.முழுவதுமாக கற்று அதற்கான தகுதிச் சான்றிதழும் பெற்று, தற்போது சென்னையில் உள்ள ட்ரோன் தொடர்பான தனியார் நிறுவனத்தில், பணிபுரிந்து வருகிறார். பெண்களுக்கு இத்துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கிறார் இவர்.''இன்று விவசாயத்தில், டிரோனின் பயன்பாடு அதிகம். அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில், நிறைய பேருக்கு தெளிவாக விளக்கினேன். பலர் கேட்டு ஆச்சரியப்பட்டனர். டில்லியில் உள்ள 'Directorate General of Civil Aviation'ல் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றதால், Drone Instructor அங்கீகாரம் கிடைத்துள்ளது. இன்னும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது,'' என்கிறார் ஸ்ரேயவர்தினி.கற்க நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்து விட்டாலே, வானம் தொட்டு விடும் துாரம்தான். வாழ்த்துக்கள் பைலட்!