| ADDED : ஜூன் 08, 2024 01:54 AM
கோவை;விளையாட்டு விடுதிகளில் இடம் கிடைத்துள்ள மாணவர்களின் வசதிக்காக, நேரு ஸ்டேடியத்தில் உள்ள மாணவர்கள் விடுதியை சீரமைக்கும் பணிகள் முடிந்தன. மாணவர்களை வரவேற்க விடுதி தயாராகி வருகிறது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விளையாட்டில் திறமையுள்ள மாணவர்களை கண்டறிந்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதிகள் வாயிலாக, இலவச பயிற்சி மற்றும் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.அதன்படி, கோவையில் உள்ள விளையாட்டு விடுதியில், ஆண்டுதோறும் 60 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்படுகிறது. இந்தாண்டுக்கான தேர்வு, பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இதில், கோவையில் வாலிபால் விளையாட்டிற்கு 24 மாணவர்கள், கூடைப்பந்து விளையாட்டுக்கு 24 மாணவர்கள் மற்றும் தடகளத்தில் 12 மாணவர்கள் என, 60 பேர் தேர்வாகியுள்ளனர்.தேர்வாகியுள்ள மாணவர்களுக்கு வரும், 10ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், நாளை விடுதிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, நேரு ஸ்டேடியம் வளாகத்தில் உள்ள விடுதி பராமரிப்பு மற்றும் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டது.மாணவர்களின் வசதிக்காக, சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பில், அறைகளை பெரிதுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உணவு உண்ணும் அறைக்கு, தேவையான பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இப்படி, மாணவர்களை வரவேற்க விடுதி தயார் நிலையில் உள்ளது.