உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கட்டட வலிமையும், ஆயுளும் முக்கியம் மேம்படுத்த பல வழிகள் இருக்கு; கவலை எதற்கு?

கட்டட வலிமையும், ஆயுளும் முக்கியம் மேம்படுத்த பல வழிகள் இருக்கு; கவலை எதற்கு?

''புதிதாக கட்டும் வீட்டிலோ அல்லது கட்டி முடித்த பழைய வீட்டையோ முறையாக பாதுகாக்க வேண்டும்,'' என்கிறார், கோவை பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா துணைத் தலைவர் ஜோசப்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:நீர்க்கசிவு, கட்டடங்களின் விரிசல், எக்ஸ்பான்ஷன் இணைப்பு விட்டுப் போதல், பழைய கட்டுமானத்துடன், புதிய கட்டுமானத்தை இணைத்த இணைப்பு பாதித்து விடுதல், வெப்பத்தால் தாக்கப்படுவது, புழு பூச்சிகளால் பாதிப்பு, குழியான பகுதியில் அதிக எடையுள்ள பொருட்களை நிரப்பியதால் ஏற்படும் பாதிப்பு, இரும்பு கம்பிகள் துருப்பிடித்தல் போன்ற காரணிகளால், கட்டடத்தின் வலிமை, ஆயுள் குறைய வாய்ப்புள்ளது.புதிய கட்டடத்தின் அடித்தளம், மேல்மட்டம், பிளின்த் மட்டம், லிண்டல் கூரை மட்டம், மொட்டை மாடி, தண்ணீர் தொட்டி, கழிவுநீர் தொட்டி போன்ற பல்வேறு நிலைகளில் இதற்கான ரசாயன பொருட்களை வாங்கி, முறைப்படி பயன்படுத்துவதால், நீரினால் வரும் பாதிப்பை தடுக்கலாம்.வெப்ப தடுப்பு பொருட்கள் வாங்கி கட்டடத்தின் கூரை, தரை, சுவர், பைப் போன்றவற்றில், கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும். கட்டடத்தில் வரும் பள்ளமான பகுதியான குளியல் அறை, போர்ட்டிகோ போன்ற பல்வேறு பகுதிகளை, எடை அதிகமான செங்கல் பொடிகளை கொண்டு, நிரப்புவதை தவிர்த்து விட வேண்டும்.தற்போது எடை குறைவான பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி அதற்கு உண்டான முறையில் பயன்படுத்த வேண்டும்.துருப்பிடித்த கம்பிகளை, நன்கு தேய்த்து சுத்தம் செய்து விட வேண்டும். அதன் பின், அதற்குண்டான பெயின்டை கம்பிகள் மீது பூச வேண்டும். கான்கிரீட் போடும் போது, கலவை வலிமை பெறவும், கம்பி துருப்பிடிப்பதை தடுப்பதற்கும், விசேஷமான பொருட்கள் உபயோகிக்கலாம். கரையான், எலி, எறும்பு போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, ரசாயன மருந்துகளை ஊசி வாயிலாகவோ, துளையிட்டோ, நீரில் கலந்தோ, கொடுக்கப்பட்ட முறைப்படி பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற முறைகளால், கட்டடத்தை பாதுகாத்து, ஆயுள் காலத்தை நீட்டிக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ