உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கடந்த மாதம் ரூ.10,800 கோடிக்கு வர்த்தகம்; ஆயத்த ஆடை ஏற்றுமதி 5.54 சதவீதம் உயர்வு

கடந்த மாதம் ரூ.10,800 கோடிக்கு வர்த்தகம்; ஆயத்த ஆடை ஏற்றுமதி 5.54 சதவீதம் உயர்வு

திருப்பூர் : நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த மாதம், 5.54 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்த மாதம், 10 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்துள்ளது.உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக, கடந்தாண்டு முழுவதும், ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவு நிலையில் இருந்தது. நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியுடன், இறக்குமதி வர்த்தகமும் குறைந்து போனது. வளர்ந்த நாடுகளில், இயல்புநிலை திரும்பியதால், கடந்த ஜன., முதல் ஏற்றுமதி வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பியது.கடந்த மாத நிலவரப்படி, 10 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 538 கோடி ரூபாய் அதிகம்.நிதியாண்டின் துவக்கம், மனநிறைவை கொடுப்பதாக ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த நிதியாண்டில் (2023 -24), ஏப்., முதல் ஜூன் மாதம் வரையில், 30 ஆயிரத்து, 370 கோடி ரூபாய் அளவுக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு (ஏப்., - ஜூன்) ஏற்றுமதி, 32 ஆயிரத்து, 115 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.உலகளாவிய ஆயத்த ஆடை வர்த்தகத்தில், சீனாவுடன் தொடர்பில் இருந்த நாடுகள், கொரோனாவுக்கு பின், இந்தியாவுடனான வர்த்தக உறவையும் விரும்புகின்றன. புதிய வர்த்தக நிறுவனங்கள், இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இதனால், ஏற்றுமதி வர்த்தகம் உயர்ந்து வருவதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது: சீனா மற்றும் வங்கதேசத்துடன் வர்த்தகம் செய்த, முன்னணி 'பிராண்டட்' நிறுவனங்கள், திருப்பூருக்கு ஆர்டர் கொடுக்க துவங்கியுள்ளன. நிறுவனங்களை ஆய்வு செய்து, 'வளம் குன்றா வளர்ச்சி நிலை' உற்பத்தியை பார்த்து வியந்து, புதிய ஆர்டர்களை வழங்கி வருகின்றனர். ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த புதிய நிறுவனங்கள், திருப்பூரை நோக்கி வந்து கொண்டிருப்பதால், ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏற்றுமதி வர்த்தகத்தில், 10 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை