| ADDED : ஜூலை 07, 2024 01:41 AM
கோவை:கோவையில் நடந்த, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வில், 32 ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றனர். கோவை கல்வி மாவட்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இந்த கல்வியாண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு, டவுன்ஹாலில் உள்ள புனித மைக்கேல் பள்ளியில் நேற்று நடந்தது. இதில் கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியங்களில், இடமாறுதல் கோரிய அரசு பள்ளி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 77 பேர் பங்கேற்றனர்.இது குறித்து, மாவட்ட துவக்க கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் கூறியதாவது: கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் உள்ள, 39 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு, 132 இடைநிலை ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்து இருந்தனர். கலந்தாய்வில் பங்கேற்ற, 77 பேரில் 24 பேர் பணி இடமாறுதல் பெற்றனர். 53 பேர் இடமாறுதல் பெற விரும்பவில்லை. 55 பேர் இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றிய ஊராட்சி துவக்கப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 13 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு, 55 ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.இந்த கலந்தாய்வில், 11 பேர் பங்கேற்றனர். இதில் எட்டு பேர் இடமாறுதல் பெற்றனர். மூன்று பேர் விருப்பம் தெரிவிக்கவில்லை. 44 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. வரும் 12ம் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்காகன இடமாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.