உடுமலை.;ரோடு விரிவாக்கத்துக்காக, அகற்றப்பட்ட மரங்களுக்கு மாற்றாக, புதிதாக மரக்கன்றுகள் நடவு செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து தமிழக முதல்வருக்கு மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டங்களின் கீழ் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த ரோடுகளில், ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ளன. சுற்றுச்சூழலில் முக்கிய பங்களிப்பு அளிக்கும் இந்த மரங்கள் பராமரிப்பில், நெடுஞ்சாலைத்துறை போதிய அக்கறை காட்டவில்லை.மேலும், பல்வேறு ரோடுகளில், விரிவாக்கப்பணிகளுக்காக நெடுஞ்சாலைத்துறையால், மரங்கள் வெட்டப்படுகின்றன. ஆனால், அதற்கு மாற்றாக, மரக்கன்றுகள் நடப்படுவதில்லை.நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக வெட்டப்படும் ஒரு மரத்துக்கு பதில், புதிதாக 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நெடுஞ்சாலைத்துறையினர் பின்பற்றுவதில்லை.உதாரணமாக, பொள்ளாச்சி - தாராபுரம், உடுமலை - தாராபுரம், பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், ரோடு சந்திப்பு பணிகளுக்காக மரங்கள் அகற்றப்பட்டு, மீண்டும் நடவு செய்யவில்லை.இதே போல், திருமூர்த்திமலை ரோட்டில், போடிபட்டி பகுதியில், அப்பகுதியின் அடையாளமாக இருந்த மரங்கள் சமீபத்தில் வெட்டப்பட்டது.விரிவாக்கப்பணிகள் இழுபறியாக உள்ள நிலையில், புதிதாக மரக்கன்றுகள் நடவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை.தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகளின் போது மட்டும், சில மரங்கள் மறு நடவு செய்யப்பட்டன. அதன்பின்னர், இத்தகைய பணிகள் எதுவும் நடைபெறவில்லை.இதே நிலை தொடர்ந்தால், உடுமலை, மடத்துக்குளம் பகுதியிலுள்ள பெரும்பாலான ரோட்டோர மரங்கள் அகற்றப்பட்டு, பசுமை முற்றிலுமாக காணாமல் போய் விடும்.எனவே, மரக்கன்றுகள் நடவு செய்ய நெடுஞ்சாலைத்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதல்வருக்கு, உடுமலை பகுதி மக்கள் மனு அனுப்பியுள்ளனர்.