| ADDED : ஜூலை 06, 2024 12:20 AM
கோவை:வேளாண் பல்கலையின் மறைந்த முன்னாள் துணைவேந்தர் ராமசாமிக்கு, அஞ்சலி கூட்டம் நடந்தது. கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் ராமசாமி. வேளாண் பல்கலையின் ஊரக வளர்ச்சி மையத்தின் இயக்குனராக, 1997 முதல் 2002 வரை பணியாற்றினார். ஆறு ஆண்டுகள் துணைவேந்தராக பணியாற்றிய இவர், ஆராய்ச்சி மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக மத்திய அரசிடம் இருந்து, 50 கோடி ரூபாய் சிறப்பு நிதி பெற்று, மாணவர்களின் கல்வி நலன், ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டிற்காகவும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதுபோல், அமெரிக்காவின் கார்னல் பல்கலை உதவியுடன், நாட்டிலேயே முதல் முறையாக வேளாண் பல்கலையில், இரட்டை பட்டய படிப்பு முறையை அறிமுகம் செய்தார். மாணவர்கள், ஆசிரியர்கள் நலனுக்காக பாடுபட்ட இவர், நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இவருக்கு நேற்று பல்கலையில், துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமையில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடந்தது. ஆசிரியர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.