| ADDED : மே 30, 2024 11:44 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், சரக்கு வாகனங்கள் செல்லும் ரோடு பராமரிப்பின்றி கான்கிரீட் பெயர்ந்து கிடப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு, வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயிலில், ஆயிரக்கணக்கான டன்கள் மூலப்பொருட்கள் ஏற்றி வரப்படுகின்றன.குறிப்பாக, சோயா மற்றும் மக்காச்சோளம் அதிகளவில் வருகின்றன. இவற்றை, லாரிகளில் ஏற்றி தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.இதற்காக, நுாற்றுக்கணக்கான லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. ரயில் வந்து நிற்கும் யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டு, சரக்குகள் ஏற்றப்படுகின்றன. இந்த யார்டு பகுதிக்கு செல்லும் தடம், கான்கீரிட் ரோடு அமைக்கப்பட்டு இருந்தது. போதிய பராமரிப்பின்றி, தற்போது கான்கிரீட் ரோடு பெயர்ந்து நிற்கிறது. இதனால், லாரி ஓட்டுநர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:சரக்கு ரயில் நிறுத்தப்பகுதிக்கு செல்லும் ரோடு முழுவதும் சேதமடைந்துள்ளன. ஆங்காங்கே, கான்கிரீட் கம்பிகள் பெயர்ந்து வெளியே தெரிகின்றன. அதில், வாகனங்களில் செல்வதால், பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், விபத்து அபாயமும் உள்ளதால் கவனமுடன் செல்லும் நிலை உள்ளது.இந்த ரோட்டை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. வீண் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன், ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.