| ADDED : ஆக 09, 2024 12:09 AM
பாலக்காடு:பாலக்காடு அருகே செயல்படும், நிதி நிறுவனங்களில் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பகுதியில் செயல்படும், தனியார் நிதி நிறுவனங்கள் தேஜஸ் சூர்யா பைனான்ஸ், சூர்யா நிதி லிமிடெட். ஒரு குழுமத்தின் உரிமையில் இந்த இரு நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், இந்த நிறுவனங்களின் சில ஊழியர்கள் சேர்ந்து பண மோசடி செய்துள்ளதாக கூறி, உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், பட்டாம்பி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் பத்மராஜன் தலைமையிலான போலீஸ் படையினர் நடத்திய விசாரணையில், போலி தங்க அடமான பத்திரம் தயாரித்து, ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்தது நிறுவனத்தின் மேலாளரான ஒற்றைப்பாலம் பேரூர் பகுதியைச் சேர்ந்த ஹரீஷ் 24, மற்றும் துணை மேலாளரும் ஆடிட்டரும் ஆன, திருவேகப்புறை பகுதியைச்சேர்ந்த ராஜீஷ் 27, ஆகியோர் என தெரிய வந்தது. இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தில், வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து, விசாரித்து வருகின்றனர்.