| ADDED : ஆக 01, 2024 01:45 AM
கோவை : புகை கக்கும் பஸ்களுக்கு பதிலாக கோவை நகரை மாசில்லா நகராக மாற்றுவதற்கான பரீட்சார்த்த முயற்சியை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் துவக்கியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக, கோவை கோட்டத்தில் இயங்கும் டவுன்பஸ்களில் பெரும்பாலானவை புகை கக்குகின்றன. இது சுற்றுச்சூழலை மாசடையச்செய்வதோடு பயணிகளுக்கும், சக வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாசை குறைக்கவும் தொழில்நுட்ப ரீதியாகவும் கோவையில் இயங்கும் பெரும்பாலான அரசு டவுன் பஸ்களை டீசலுக்கு பதிலாக, ஆட்டோ காஸ் பயன்படுத்தி இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், கோவை உக்கடத்திலிருந்து மயிலம்பட்டி வரை இயங்கும் வழித்தடம், 39 எண் கொண்ட பஸ்சில், டீசல் பயன்பாட்டிற்கு பதிலாக 'ஆட்டோகாஸ் கிட்' பொருத்தப்பட்டு நேற்று பரீட்சார்த்த முறையில் இயக்கப்பட்டது. அதே போல், ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கிணத்துக்கடவு வரை, வழித்தடம் 33 எண் கொண்ட பஸ்சிலும் ஆட்டோ காஸ் பொருத்தி இயக்கப்பட்டது. இவ்விரண்டு பஸ்களுக்கும் வழக்கமாக நிரப்பும், 80 லிட்டர் டீசலை போலவே, 80 கிலோ ஆட்டோ காஸ் நிரப்பப்பட்டது.இரண்டு பஸ்களும், எந்த இடத்திலும் பழுதாகவில்லை. வேகமும் வழக்கம் போல் இருந்தது. புகை மட்டும் வெளியேறவில்லை. ஒருசில பயணியர் மட்டும், 'என்ன இது, காஸ் லீக் ஆகுற மாதிரி ஸ்மெல் வருதே' என்றனர்.