கோவை:அரசு, தனியார் உட்பட அனைத்து அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்கப்படுவதுடன், உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றவேண்டியது அவசியம் என, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் அம்பிகா தெரிவித்தார்.பணியிடங்களின் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விசாகா கமிட்டி அமைக்கப்படுகிறது. பள்ளி, கல்லுாரிகள், அலுவலகங்கள் அளவில் ஐ.சி.சி., என்ற பெயரில் இக்கமிட்டி செயல்படுகிறது. மாவட்ட அளவில், கலெக்டர் அலுவலகத்தில் இக்கமிட்டி இயங்குகிறது. இக்குழுவின் விதிமுறைப்படி, கமிட்டியின் தலைவர் பெண்ணாக இருப்பதுடன், உறுப்பினர்களில், 50 சதவீதம் பேராவது பெண்கள் இருக்க வேண்டும். 10 பேருக்கு மேல் பணிக்கு வரும் அனைத்து நிறுவனங்களிலும், ஐ.சி.சி., கமிட்டி செயல்பட வேண்டும். ஆனால், கோவையில் பல்வேறு நிறுவனங்களில், இக்கமிட்டி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. கல்லுாரிகளில் இக்குழு வழிமுறைப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் அம்பிகா கூறுகையில், ''எங்கள் களப்பணியாளர்கள் கிராஸ்கட் சாலை உள்ளிட்ட இடங்களில், அமைந்துள்ள அலுவலகங்களுக்கு நேரடியாக சென்று, விசாகா கமிட்டி அமைப்பது குறித்து விளக்கம் அளித்து வந்துள்ளனர். அலுவலர்கள் அளவில் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கமிட்டியில், புகார் அளிக்கலாம். கமிட்டி அமைக்காத அலுலலகங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.