'கட்டடங்களில் ஏற்படும் விரிசல் தடுக்க, சரியான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்,'' என்று அறிவுறுத்துகிறார், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்க (காட்சியா) உறுப்பினர் பிரதோஸ் பிரசன்னா.அவர் கூறியதாவது:விரிசல்கள் வர முக்கிய காரணம், க்யூரிங் எனப்படும் தண்ணீர் ஊற்றும் முறை. சிமென்ட்டில் உள்ள வெப்பத்தை குறைக்கவே, நாம் நீர் ஊற்றுகிறோம். இந்த நீர் தான் நமது கட்டடத்தை உறுதி செய்யவும், சிமென்ட்டின் வெப்பத்தை குறைத்து ஆயுளை அதிகரிக்கிறது.எனவே, முதலில் நீர் சரியாக ஊற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்தால், விரிசல்களை எளிதில் தடுக்கலாம். கலவை கலக்கும் போது, சிமென்ட், மணல் ஆகியவை சரியான அளவில் தான் கலக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்தால், அதனால் ஏற்படும் விரிசல்களை தடுக்கலாம்.நீண்ட நாட்களாக கட்டடங்களை முடிக்காமல் வைப்பதால் அதில் பல்வேறு, ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அதனால் கட்டடத்தின் ஆயுள் குறைவதோடு, பல இடங்களில் விரிசல்கள் வர வழிவகுக்கும்.இதை தடுக்க, சரியான முறையில் கட்டடத்தை வடிவமைப்பதோடு, விரைந்து முடிக்கவும் வேண்டும். பூச்சு வேலை ஆரம்பிக்கும் முன்பே, என்ன தேவையோ அதை முன்பே முடிவு செய்து செயல்படுத்துவது அவசியம். இல்லையென்றால், அதுவும் விரிசல்களுக்கு வழி வகுக்கும்.ஜன்னல் மட்டத்தில் கான்கிரீட் அமைத்துக் கொண்டால், ஜன்னல் மூலைகளில் ஏற்படும் விரிசலை தடுக்கலாம். இந்த மட்டத்தில் போடப்படும் கான்கிரீட்டுக்கு, 'சில் கான்கிரீட்' என்று பெயர்.அதிக வெப்பம், அதிக குளிர் போன்றவைகளால் சுவரின் மேற்பரப்பில் உருவாவது, 'ஏர் கிராக்'. இதற்கு ஒரே தீர்வு, கட்டடம் கட்டி குறைந்தது ஒரு வருடம், பட்டி அல்லது பெயின்ட் பயன்படுத்தாமல், வெறும் 'ஸ்னோசெம்' எனும் சுண்ணாம்பு பூச்சு மட்டும் பயன்படுத்தி, ஒரு வருடம் கழிந்த பின், பட்டி அல்லது பெயின்ட் பயன்படுத்தலாம். இம்முறைகளால், விரிசல்களை தடுத்து, கட்டடத்தின் ஆயுளை அதிகப்படுத்தலாம்.
விரிசல்களில் இத்தனை வகையா!
கட்டடங்களில் ஏற்படும் விரிசல்கள் பலவகை. அவை, சிமென்ட் அதிகமானால் வருபவை, கட்டடங்களுக்கு சரியாக நீர் ஊற்றாமல் வருவது, நீண்ட நாள் கட்டடத்தை முடிக்காமல் வைப்பதால் வருவது, பில்லர் ஜாயின்ட்களில் வருவது, கட்டடத்தை உடைத்த பின் அதை சரி செய்வதால் வருவது. இதை தவிர, காற்றால் ஏற்படும் விரிசல்களும்(Air cracks) உண்டு.