கோவை : கோவை மாவட்ட நிர்வாகம், தெற்கு கோட்டாட்சியர், சூலுார் தாசில்தார் ஆகிய மூவரும் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக ஏன் அறிக்கை ஏதும்தாக்கல் செய்யவில்லை, ஆக்கிரமிப்பு அப்புறப்படுத்தாதது ஏன் என்று, ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.கோவை - அவிநாசி சாலை, கருமத்தம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் சாலையின் பெரும்பாலான பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்தி வாகன மற்றும் மக்கள் போக்குவரத்தை எளிமைப்படுத்த வேண்டும் என்றும், சென்னை ஐகோர்ட்டில் 2023ம் ஆண்டு, கருமத்தம்பட்டி எலச்சிபாளையத்தை சேர்ந்த பிரபாகரன், வழக்கு தொடர்ந்தார்.அதற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், கோவை மாவட்ட நிர்வாகம், கோவை தெற்கு கோட்டாட்சியர், சூலுார் தாலுகா தாசில்தார் ஆகிய நால்வரும், ஐகோர்ட்டில் பதிலளிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டது.அதன் அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய திட்ட இயக்குனரும் துணை பொதுமேலாளருமான செந்தில்குமார் மட்டுமே, கோர்ட்டில் அளித்துள்ள விளக்கம்:கருமத்தம்பட்டி கிராமம் சர்வே எண் 285 ல் உள்ள, பழனிசாமி உள்ளிட்ட ஆறு ஆக்கிரமிப்பாளர்களுக்கும், 2018 ஆக.,28ல் ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்திக்கொள்ள, நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆக்கிரமிப்பாளர்கள், 'கடந்த ஐம்பதாண்டுகளுக்கும் முன்னதாக பட்டா வழங்கப்பட்டு அங்கு கட்டடம் கட்டி வரிவிதிப்பு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் இணைப்பு, மின் கட்டணம் செலுத்தி வருவதாகவும், எங்களது வசிப்பிடம் ஆக்கிரமிப்பு அல்ல' என்றும் கூறியுள்ளனர்.இது தொடர்பாக, கோவை தெற்கு கோட்டாட்சியருக்கு அவர்கள் சொத்துவரி, தண்ணீர்வரி, மின்கட்டணம் ஆகியவை செலுத்துகின்றனரா, ஆக்கிரமிப்பாளர்கள் பதிவு செய்தது சரிதானா என்று உண்மை தன்மையை சரிபார்க்க, 2022 மே 18ல் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பினோம்.அதற்கு இதுவரை எந்த பதிலும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை. இது குறித்து கோவை தெற்கு கோட்டாட்சியருக்கு பலமுறை நினைவூட்டியும் எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை. ஆக்கிரமிப்பாளர்கள் மீது எந்த உறுதியான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.மாவட்ட நிர்வாகமும், வருவாய்த்துறையும், தாலுகா தாசில்தாரும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு எவ்வித ஒத்துழைப்பும் நல்கவில்லை.இவ்வாறு, அவர் விளக்கம் அளித்துள்ளார்.இச்சூழலில் கோவை மாவட்ட நிர்வாகம், தெற்கு கோட்டாட்சியர், சூலுார் தாசில்தார் ஆகிய மூவரும் ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை ஆக்கிரமிப்பையும் அப்புறப்படுத்தவில்லை ஏன் என்று, கோர்ட் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.