| ADDED : ஜூலை 19, 2024 02:58 AM
மேட்டுப்பாளையம்;ஆண் சுகாதார ஆய்வாளர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவது போல், பெண் சுகாதார செவிலியர்களுக்கும், பதவி உயர்வு வழங்க வேண்டும் என, சுகாதார செவிலியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தின், கோவை மாவட்ட செயற்குழு கூட்டம், காரமடையில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரேவதி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் பிரபா சகாயம் மேரி, சிவசங்கரி, கலையரசி முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் இந்திரா, கோரிக்கைகளை விளக்கி பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது: எங்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கையான, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதி உதவி திட்டப் பணியை, சமூக நலத்துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்து, கிராம சுகாதார செவிலியர் மேற்கொள்ளும், தாய் சேய் நலப்பணி, தடுப்பூசி பணி மற்றும் குடும்ப நல பணிகள் செவ்வனே நடைபெற உரிய உத்தரவு வழங்க வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு ஒதுக்கீடு செய்த பணிகளுக்கு முரணாக, அரசாணைக்கு எதிராக கம்ப்யூட்டர் பணிக்கு உட்படுத்துவதையும், மிரட்டுவதையும், அச்சுறுத்துவதையும் கைவிட வேண்டும். மேலும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களை நியமிக்க வேண்டும்.ஆண் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது போல், பெண் சுகாதார செவிலியர்களுக்கும், பதவி உயர்வு வழங்க வேண்டும், என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.