| ADDED : ஆக 03, 2024 06:37 AM
பெண் தெய்வமாக வணங்கப்படும் ஆறு, குளம், குட்டை போன்ற நீராதாரங்களுக்கு சென்று, மலர்துாவி நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிமாதம் 18ம் நாள், ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது.புதுமணத் தம்பதிகள் நீர்நிலைகளில் புனித நீராடி, தாலிப்பெருக்கு எனப்படும் தாலி மாற்றிக் கொள்வது வழக்கம்.திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு, வாழை இலையிட்டு, பூ, குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், மங்கல பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்து, பெற்றோர்களிடம் ஆசி பெற்று தாலி மாற்றிக் கொள்வர். கன்னிப்பெண்கள், தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்கவேண்டி இறைவனை வேண்டுவர். குழந்தை வரம் வேண்டும் தம்பதியர், விநாயகர் வீற்றிருக்கும் அரசமரத்தில் தொட்டில் கட்டி வழிபாடு நடத்துவர். தொடர்ந்து, வீட்டில் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் தொடரும் வகையில், சிறப்பு விருந்து பரிமாறி, உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து பெருமைப்படுத்துவர்.