உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரும்புச்சத்து குறைபாட்டால் மஞ்சள் நிறத்தில் வாழைமரம்

இரும்புச்சத்து குறைபாட்டால் மஞ்சள் நிறத்தில் வாழைமரம்

மேட்டுப்பாளையம்;'இரும்புச்சத்து குறைபாட்டினால், இளம் வாழை இலைகள், மஞ்சள் நிறமாக உள்ளது' என, தோட்டக்கலை உதவி இயக்குனர் சுசீந்திரா அறிவித்துள்ளார். மேட்டுப்பாளையம் தாலுகாவில், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் வாழை விவசாயம் பிரதானமாக உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கதளி, நேந்திரன், ரோபஸ்டா, செவ்வாழை, பூவன், ரஸ்தாலி என பல்வேறு வகையான வாழைகளை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.காரமடை மேற்கு பகுதியில் பல விவசாய நிலங்களில், வாழை இலைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் உள்ளன. இதனால் வாழைத்தார்களின் எடை குறைவாக இருக்கும் என, விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனர். இது குறித்து காரமடை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுசீந்திரா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வாழைப்பயிரில் அதிக மகசூல் பெறவும், பயிரினை பூச்சி மற்றும் நோய் தாக்குதலிருந்து பாதுகாக்க, பேரூட்டச் சத்துகளான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் பயிருக்கு மிகவும் அவசியமாகும். நுண்ணூட்டச் சத்துக்களில் முக்கியமாக, இரும்புச்சத்து வாழை பயிருக்கு தேவையான ஒன்றாகும். இதன் பற்றாக்குறையானது உவர் நிலத்தில் பதிவாகி இருக்கும். இளம் இலைகளின் நரம்பிடையில் சோகை காணப்படும். இரும்புச்சத்து குறைபாட்டில் இளம் வாழை இலைகள் மஞ்சள் கலந்த பச்சை நிறமாகவும், பின்னர் முற்றிலும் மஞ்சள் நிறமாக மாறி வெளிறி காணப்படும். இந்த குறைபாட்டினை சரி செய்ய, இரும்பு சல்பேட் ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் அளவில் கலந்து, இலை வழியாக தெளிக்க வேண்டும்.இதனோடு யூரியா ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் அளவில் ஒட்டும் திரவத்தோடு சேர்த்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை இலை வழியாக தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வாழைக்கு இரும்பு சத்து கிடைத்து, மஞ்சள் நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறும். மகசூல் குறைய வாய்ப்பு இருக்காது. இவ்வாறு உதவி இயக்குநர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை