UPDATED : ஜூலை 03, 2024 06:27 AM | ADDED : ஜூலை 02, 2024 11:17 PM
கோவை:தைவான் நாட்டின் தைபே பொருளாதார மற்றும் கலாசார மையம், கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில், டி.ஒ.சி.எப்.எல்., என்ற, சீன மொழித் தேர்வை நடத்தியது.கற்பகம் உயர்கல்வி நிறுவனம் தைவான் கல்வி மையத்தின் அனுமதி பெற்ற மாண்டரின் தேர்வு மையமாகும். இந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்ட, 16வது மாண்டரின் திறன் தேர்வு இதுவாகும். தேர்வில் 101 மாணவர்கள் பங்கேற்றனர். இது, இந்தியாவில் ஒரே நேரத்தில், மிக அதிக மாணவர்கள் எழுதிய, டி.ஒ.சி.எப்.எல்., தேர்வாகும்.தைபே பொருளாதார மற்றும் கலாசார மையத்தின், கல்வி இயக்குனர் பீட்டர்ஸ் சென் மற்றும் தைவான் கல்வி மையத்தில் இருந்து, மாண்டரின் கற்றல் பயிற்றுவிப்பாளர்கள் காங் சியூங் வென் மற்றும் வெய் வெய் டிங் இந்த மொழித் தேர்வை நடத்தினர்.கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில், தைவான் கல்வி மையமானது அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, மாணவர்கள் சுமார் மூன்று முதல் ஆறு மாதங்கள், சீன மொழியை கற்றுத் தகுதி பெறுவர். இந்த டி.ஒ.சி.எப்.எல்., தேர்வானது, சர்வதேச தரங்களுடன் ஒப்பிடக்கூடியது என கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் வெங்கடாசலபதி தெரிவித்தார். பதிவாளர் ரவி மற்றும் டீன் பார்yfதசாரதி ஆகியோர், தேர்வை ஒருங்கிணைத்து நடத்தினர்.