பொள்ளாச்சி;பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த ஆண்டில், 12,599 வாகனங்கள் பதிவாகியுள்ளன.பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகள் உள்ளன. இங்கு புதிதாக வாங்கும் வாகனங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவெண் மற்றும் ஆர்.சி., புத்தகம் பெறப்படுகின்றன.ஆண்டுதோறும், 10 - 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் புதியதாக பதிவு செய்யப்படுகின்றன.கடந்த ஆண்டில், இருசக்கர வாகனங்கள் (மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டி) - 7,771, மொபட் - 795, மோட்டரைஸ்டு சைக்கிள் (சிசி 25) - 35, கார் - 2,615, விவசாய பயன்பாட்டுக்கான வாகனங்கள் - 245, சரக்கு வாகனங்கள் - 733, மூன்று சக்கர வாகனங்கள் (பயணியர்) - 128, மூன்று சக்கர சரக்கு வாகனங்கள் - 94 என மொத்தம், 12,599 வாகனங்கள் பதிவாகியுள்ளன. சர்வதேச உரிமம்
புதியதாக லைசென்ஸ், 6,584 பேர், இருசக்கர வாகனங்கள் லைசென்ஸ் உள்ளவர்கள், நான்கு சக்கர வாகனத்துக்கு சேர்த்து எடுத்த வகையில், 3,016 பேரும் எடுத்துள்ளனர். மேலும், சர்வதேச அளவில் வாகனங்கள் இயக்க, 76 பேர் உரிமம் பெற்றுள்ளனர்.லைசென்ஸ் புதுப்பிக்க, 6,490 பேரும், முகவரி மாற்றம், 2,975 என மொத்தம், 19,141 பேர் லைசென்ஸ் எடுத்துள்ளனர்.வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில், புதிய வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாகனங்கள் ஓட்டுவோர், பாதுகாப்பாக சாலை விதிகளை கடைபிடிப்பது அவசியமாகும்.விபத்துக்களை தடுக்க 'ஹெல்மெட்' அணிந்தும், கார் ஓட்டுவோர் 'சீட் பெல்ட்' அணிந்தும் வாகனங்களை இயக்க வேண்டும். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலகம் வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு, கூறினர்.