உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / "அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

"அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

அன்னூர் : 'அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது' என, உதவி தொடக்க கல்வி அலுவலர் தெரிவித்தார். பிள்ளையப்பம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் வரவேற்றார். 'அனைவருக்கும் கல்வி இயக்க' வட்டார மேற்பார்வையாளர் ஜோசப் சகாயராஜ் பேசுகையில்,''அரசு பள்ளிகளில் கற்றலுக்கான சூழ்நிலை மேம்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு ஆண்டு முழுவதும் பயிற்சி அளிக்கப்படுகிறது. பாடத்திட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டு, 'டிவிடி', பவர் பாயின்ட், கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பாடபுத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என்றார். உதவி தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன் பேசுகையில்,''அன்னூர் ஒன்றியத்தில் 73 துவக்க, 18 நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் அறிவியல் கண்காட்சி நடக்கிறது,'' என்றார். ஊராட்சி தலைவர் ராணி பேசுகையில்,''இப்பள்ளியில் 270 பேர் படிக்கின்றனர். இதில், 90 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டவர்கள். ஆசிரியர் பணியிடம் ஒன்று பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரமுயர்த்த அரசுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி, இரண்டு ஆண்டுகளாகி விட்டன. இதுவரை தரம் உயர்த்தவில்லை. அரசியல் செல்வாக்கால் இதைவிட குறைந்த மாணவர்கள் உள்ள நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரமுயர்த்தப்பட்டுள்ளன,'' என்றார். கல்விக்குழு தலைவர் கணேசமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் வெள்ளிங்கிரி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை