உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / "சோதனையிலும் "சாதித்த அன்னக்கிளி :கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

"சோதனையிலும் "சாதித்த அன்னக்கிளி :கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

கோவை : போலீசாரின் கடும் சோதனைகளுக்கு மத்தியிலும் கோவை கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. நேற்று மனு அளிக்க வந்த ஒரு பெண், போலீசாரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடைபெறுகிறது. பட்டா, இலவச நிலம், ஓய்வூதியம், மோசடி, குடும்பச் சண்டை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி, கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளிக்கின்றனர். சில மனுதாரர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவோரின் கோரிக்கைகள் பரபரப்பு செய்தியாக மாறி விடுவதே காரணம். ஆனாலும், நியாயமான கோரிக்கை என்றால் மட்டுமே, உடனடி தீர்வுக்கு கலெக்டர் கருணாகரன் உத்தரவிடுகிறார். கடந்த வாரம் மனு அளிக்க வந்த ஒரு வயதான தம்பதியர், கலெக்டர் முன்னிலையில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டனர். கலெக்டர் கருணாகரன் பதவியேற்றபின் நடந்த முதல் தற்கொலை முயற்சி இது என்பதால், இது போன்ற தவறான முயற்சிகளுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார். இதனால், கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் நுழையும் அனைவரையும் சோதனையிட்ட பின்பே அனுமதிக்க வேண்டும் என, போலீசாரை வலியுறுத்தியிருந்தார். இதன்படி, நேற்று கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே நின்றிருந்த போலீசார், உள்ளே நுழைபவர்களின் உடமைகளை பரிசோதித்து அனுப்பினர். நேற்று நடந்த மனு நீதி நாளில் புகார் அளிக்க வந்த ஒரு பெண், போலீசார் சோதனையிடுவதைக் கண்டு அலுவலக வளாகத்தினுள் நுழையும் முன்பே விஷம் குடித்தார். அதன் பின் சாதாரணமாக உள்ளே நுழைந்த அவர், சில நிமிடங்களில் அங்கிருந்த மரத்தின் கீழே மயங்கி சரிந்தார். உடனடியாக '108' அவசர ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட அவர், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில், அவர் ஜானி என்பவரின் மனைவி அன்னக்கிளி என்பதும், கலப்புத் திருமணம் செய்து கொண்ட சிறிது நாட்களில் பிரிந்து சென்று விட்ட கணவருடன், மீண்டும் சேர்த்து வைக்க வலியுறுத்தி விஷம் குடித்ததும் தெரிய வந்தது. போலீசாரின் தீவிர சோதனையில் பிடிபடாமல் வெற்றிகரமாக தற்கொலை முயற்சியை நிறைவேற்றிய, அந்த பெண் குறித்து போலீசார் சிலர் கூறுகையில், 'சாமர்த்தியமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இவர், தனது உடலில் உயிர் இருந்தால்தான் கணவருடன் சேர முடியும் என்பதை மறந்து போனது ஏன் என தெரியவில்லை' என, 'கமென்ட்' அடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ