கோவை;கோவை மாவட்டத்தில், 17 நாட்கள் நடத்திய சிறப்பு முகாம்களில், 77 ஆயிரத்து, 60 மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இதில், வருவாய்த்துறை சார்ந்த சேவை கோரியே அதிகப்படியான மனுக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், ஆளுங்கட்சியினர் அச்சத்தில் இருக்கின்றனர்.தமிழக அரசின் சேவையை எளிதாக பெறவும், 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும் வகையிலும், 'மக்களுடன் முதல்வர்' என்கிற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கோவையில் துவக்கி வைத்தார்.உள்ளாட்சித்துறை, மின் வாரியம், வருவாய்த்துறை, வீட்டு வசதி வாரியம் உள்ளிட்ட, 13 துறைகளுக்கு உட்பட்ட, 52 விதமான சேவைகளை பெறுவதற்கு இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.கோவை மாவட்டத்தில், 17 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 37 ஆயிரத்து, 220 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 15 ஆயிரத்து, 755 மனுக்கள் வருவாய்த்துறை தொடர்பானவை. பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், வகை மாற்றம் செய்தல், எல்லைக்கற்கள் நடுதல் உள்ளிட்ட வருவாய்த்துறை தொடர்பான சேவைகள் கேட்டு மனுக்கள் செய்யப்பட்டிருக்கின்றன.அடுத்ததாக, வீட்டு வசதித்துறை சேவை கேட்டு, 6,452 மனுக்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சேவைக்கு 5,203 மனுக்கள், மின்வாரியம் - 3,905, மாற்றுத்திறனாளிகள் துறை - 1,378 மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இதற்கென உருவாக்கியுள்ள பிரத்யேக இணையத்தளத்தில் இம்மனுக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, துரித நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.இவை தவிர, மற்ற அரசு துறை சேவை கேட்டு, 39 ஆயிரத்து, 840 மனுக்கள் பெறப்பட்டன. இவை, 'முதல்வரின் முகவரி' என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த சிறப்பு முகாம்கள் வாயிலாக, 77 ஆயிரத்து, 60 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.இதுகுறித்து, ஆளுங்கட்சியை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறியதாவது:உள்ளாட்சித்துறை சார்ந்த சேவைகள் கோரி, அதிகமான மனுக்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வருவாய்த்துறை சார்ந்த சேவையை எதிர்பார்த்து, அதிகப்படியான மனுக்கள் வந்திருக்கின்றன. மனுக்கள் மீது அரசு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொத்தாம் பொதுவாக பதிலளித்து விட்டு, கிடப்பில் போட்டு விட்டால், லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள முடியாது. ஓட்டு கேட்டு வீதி வீதியாகச் செல்லும்போது, மனு கொடுத்தவர்கள் கேள்வி கேட்பர்; அவர்களுக்கு உரிய பதிலளிக்க வேண்டும் அல்லது, தீர்வு ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதனால், சிறப்பு முகாம்களில் பெற்ற மனுக்கள் விஷயத்தில், ஒவ்வொரு அரசு துறையின் உயரதிகாரிகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அலட்சியமாக இருந்தால், தேர்தலில் அவப்பெயரை சந்திக்க நேரிடும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.