கோவை;கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோவில் என்றழைக்கப்படும் ஸ்ரீ நாகசாயி மந்திரில், 81வது ஆண்டு தரிசன தின விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.கோவையின் அடையாளங்களுள் ஒன்றான சாய்பாபா திருக்கோவிலில், 1943ம் ஆண்டு ஜன.,7ம் தேதி, வழக்கம் போல் பக்தர்களின் சாய்பஜன் நடந்து கொண்டிருந்தது.அப்போது, சத்குரு ஸ்ரீ சாய்பாபா படத்தின் முன், நாகரூப தோற்றத்தில் பாபா காட்சியளித்தார். பஜனை பாடல்களுக்கு தகுந்தவாறு, அசைந்து ஆடினார்.17 மணி நேரம் அங்கேயே இருந்து, பக்தர்கள் துாவிய மலர்களை ஏற்றுக்கொண்டார். பிறகு மெதுவாக அங்கிருந்து நகர்ந்து, அருகிலிருந்த புதரில் மறைந்தார்.அந்த நாளை விசேஷமாக கொண்டாடும் பொருட்டு நேற்று, 81வது ஆண்டு தரிசன தின விழா, பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது. காலை 5:15 மணிக்கு காகடஹாரத்தி, 6:30 மணிக்கு சாய்ஹோமம், 11:00 மணிக்கு பூர்ணாஹுதி நடந்தது.11:10 மணிக்கு ஸ்ரீ நாகசாயி பஜன், 11:30க்கு மஹா அபிஷேகம், 12:30க்கு மதிய ஆரத்தி, 1:00 மணிக்கு பிரசாத விநியோகம், 6:15க்கு துாபஹாரத்தி, 6:45க்கு நாகசாயி பஜன், இரவு 8:30க்கு சேஜஹாரத்தி நடந்தது.நேற்று நடந்த தரிசன விழாவில், சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாய் பாபாவை தரிசித்தனர். சாய் பஜனையிலும் பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் துணை தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் பாலசுப்ரமணியன், பொருளாளர் சர்வோத்தமன், அறங்காவலர்கள் தியாகராஜன், சந்திரசேகர், சுகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.