மேலும் செய்திகள்
வேல் வழிபாடு: பக்தர்கள் பரவசம்
03-Dec-2024
பெ.நா.பாளையம், : துடியலுாரில் நடந்த முருகவேல் வழிபாடு நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கோவை வடக்கு மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், முருகவேல் வழிபாடு நிகழ்ச்சி கொங்கு மண்டலத்தில் துவங்கியது. வேனில் அலங்கரிக்கப்பட்ட நிலையில் இருந்த வேலை பொதுமக்கள் வழிபட்டனர்.மருதமலையில் தொடங்கிய வேல் வழிபாடு நிகழ்ச்சி, துடியலூர் பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தது. திரளான பக்தர்கள் வரவேற்றனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு, பிரசாத வினியோகம், காவடி ஆட்டம், பெண்களின் வள்ளி, கும்மி ஆட்டம் ஆகியன நடந்தன. பின்னர், வேலுடன் இருந்த வாகனம் மேட்டுப்பாளையம் சென்றது.ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கூறுகையில், 'முருகன் கோவில் மூலஸ்தானத்தில் வேல் மட்டுமே வைத்து பிரதானமாக வழிபாடு செய்யப்படும் கோவில்கள், தமிழகத்தில் ஏராளம் உள்ளன. முருகப்பெருமானின் திருக்கரங்களில் எழுந்தருளியுள்ள ஞான வேலாயுதத்தை நாம் வழிபடுவதன் வாயிலாக ஞானத்தை, வீரத்தை, செல்வத்தை, வெற்றியை நம்மால் பெற முடியும்' என்றனர்.நிகழ்ச்சியில், கோவை வடக்கு மாவட்ட ஹிந்து முன்னணி நிர்வாகிகள் தியாகராஜன், பாலன், ஜெய் கார்த்தி, தம்பி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முருகனுக்கு 'அரோகரா'
நேற்று மாலை மேட்டுப்பாளையம் பவானி ஆறு அருகே உள்ள சுப்பிரமணியசாமி திருக்கோவிலுக்கு வேல் கொண்டுவரப்பட்டது. ஹிந்து முன்னணி கோவை கோட்ட பொறுப்பாளர் ராஜ்குமார் தலைமையில், வேல் வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் வேலுக்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து, 'முருகனுக்கு அரோகரா' என கோஷமிட்டு, தீபாரதனை காட்டி வழிபட்டனர்.
03-Dec-2024