உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உடல் நல பயிற்சிகள் வாயிலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: பயிற்சி முகாமில் அறிவுரை

உடல் நல பயிற்சிகள் வாயிலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: பயிற்சி முகாமில் அறிவுரை

பொள்ளாச்சி: ''உடல் நல பயிற்சிகளின் வாயிலாக ஆரோக்கியமான வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்,''என, தெரிவிக்கப்பட்டது. பொள்ளாச்சி அருகே, கோடங்கிபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மனவள பயிலரங்கம், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் சோபனா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் தினகரன் முன்னிலை வகித்தார். என்.ஜி.எம். கல்லுாரி மனவளப்பிரிவு முனைவர் வீரசித்தி விநாயகன் பேசியதாவது: மனவளம் மற்றும் உடல் நலமும் இணைந்தது குழந்தையின் வளர்ச்சிக்கு அடித்தளமாகும். இத்தகைய பயிற்சிகள், அரசு பள்ளி குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், நல்லொழுக்கம், துாய சிந்தனைகளை மேம்படுத்தும் கருவியாகும். உடல் நல பயிற்சிகளின் வாயிலாக ஆரோக்கியமான வளர்ச்சிகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், மூளையின் செயல்பாடுகள் மேம்பட்டு நினைவாற்றல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, தன்னம்பிக்கை, பொறுமை, மன அமைதி வாயிலாக நல்ல சிந்தனை வளர்ச்சி கிடைக்கும். இதன் வாயிலாக, மாணவர்கள் இடையே நேர்மறை எண்ணங்கள் அதிகரித்து நல்லொழுக்க மாணவர்களாக சமுதாயத்தில் திகழ்வர். பெற்றோர்களுக்கும் இப்பயிற்சிகள் அளிக்கப்படுவதால் குடும்பத்தில் ஆரோக்கியமான சூழல் நிலவி, குடும்ப நல்லிணக்கம் மேலோங்கும். குடும்ப ஆரோக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டு சமாதான சூழல் நிலவும். இவ்வாறு, பேசினார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர் சத்தியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி