சூப்பர் பாஸ்பேட் உரம் பயன்படுத்த அறிவுரை
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு வட்டாரத்தில், தென்னை, காய்கறி மற்றும் பயிர் வகைகள் என, மொத்தம், 17 ஆயிரம் ஹெக்டேர் அளவுக்கு சாகுபடி உள்ளது. இதில், விவசாயிகள் பலர் தங்கள் பயிர்களுக்கு டி.ஏ.பி., உரத்தை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது, டி.ஏ.பி., உரத்தின் விலை அதிகமாக இருப்பதால், இதற்கு மாற்றாக கால்சியம், பாஸ்பரஸ், சல்பர் போன்ற கூடுதல் சத்துக்கள் அடங்கியுள்ள சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும், என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.மேலும், சூப்பர் பாஸ்பேட் உரத்தினை எண்ணெய் வித்து பயிர்களில், டி.ஏ.பி., உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தும் போது, மகசூல் அதிகரிப்பதுடன் எண்ணெய் அளவும் அதிகரிக்கிறது. டி.ஏ.பி., உரம் மண்ணில் உப்பு நிலையை ஏற்படுத்துவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.மேலும், டி.ஏ.பி., உரத்தை விட சூப்பர் பாஸ்பேட் அம்மோனியம் பாஸ்பேட் போன்ற உரங்களின் விலை குறைவாக உள்ளது.தற்போது, டி.ஏ.பி., உரம் (50 கிலோ) - 1,350 ரூபாய், சூப்பர் பாஸ்பேட் (50 கிலோ) -610 மற்றும் அம்மோனியம் பாஸ்பேட் (50 கிலோ) 1,220 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே டி.ஏ.பி., உரத்துக்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயனடையலாம், என, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.