-நமது சிறப்பு நிருபர்-கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு, நிலம் கையகப்படுத்துவதற்கு, ரூ.2,089 கோடி நிதி ஒதுக்கப்பட்டதில், இதுவரை ரூ.1,819 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெயரளவில் மட்டுமே சர்வதேச விமான நிலையமாக உள்ள கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்தால் மட்டுமே, இங்கிருந்து வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்படும் வாய்ப்புள்ளது. இதற்குத் தேவையான நிலம், 643 ஏக்கர் கையகப்படுத்துவதற்கு, கடந்த 2010ல் அரசாணை வெளியிடப்பட்டது. பல முறை அளவீடுகள் மாற்றப்பட்டு, இறுதியாக, 633 ஏக்கர் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவற்றில், 468.83 ஏக்கர் பட்டா நிலங்களும், 134.32 ஏக்கர் பாதுகாப்புத் துறை நிலமும், 29 ஏக்கர் புறம்போக்கு நிலமும் உள்ளன. இதுவரை 403.29 ஏக்கர் பட்டா நிலம், 21 ஏக்கர் புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்புத் துறையின் நிலத்தையும் சேர்த்து, 558.87 ஏக்கர் பரப்பளவில், விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று கோவை கலெக்டர், கடந்த செப்டம்பரில் செயல்முறை ஆணை வெளியிட்டார். ஆனால் தமிழக அரசின் நிபந்தனையால் நிலத்தை ஏற்க விமான நிலைய ஆணையம் மறுத்து விட்டது. சட்டசபையில் விவாதம்
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கம் தாமதமாகி, கொங்கு மண்டலத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருவது குறித்த விவாதங்கள் வலுக்கத் துவங்கியுள்ளன. இதுகுறித்து தமிழக சட்டசபையில் நேற்று முன்தினம் காரசார விவாதம் நடந்துள்ளது.தமிழக அரசு நிபந்தனையால் விமான நிலைய விரிவாக்கம் தாமதமாகி, கோவையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கோவை தெற்கு எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். அரசு செலவழித்து நிலம் கையகப்படுத்திக் கொடுத்ததைத் தனியாருக்கு தாரை வார்க்கப் பார்ப்பதாகப் பதிலளித்துள்ள தொழில் துறை அமைச்சர் ராஜா, அரசின் முடிவுக்கு ஆதரவு கோரியுள்ளார்.கடந்த 2010ல் வெளியிட்ட அரசாணையின்படி, நிலத்தைக் கையகப்படுத்தி, 2016லிருந்து 2021 வரை, மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருந்தபோது ஒப்படைத்திருந்தால், விமான நிலைய விரிவாக்கப் பணி இப்போது முடிந்திருக்கவே வாய்ப்புள்ளது. இப்போது, மத்திய, மாநில அரசுகளிடையே உரசல் அதிகமாக இருப்பதால் தான், விரிவாக்கப்பணி தாமதமாகி வருகிறது. விரிவாக்கம் எப்போது?
இதற்கிடையில், பட்டா நிலங்களில் இன்னும் கையகப்படுத்தப்பட வேண்டிய 32.80 ஏக்கர் நிலத்தை மார்ச் 31க்குள் கையகப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் 10.22 ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடத்தை எடுப்பதில் பிரச்னையில்லை. மீதமுள்ள 22.58 ஏக்கர் நிலத்தை, தொழில் துறை நிலமெடுக்கும் சட்டம் பிரிவு 7(2) மற்றும் 7(3) ஆகிய பிரிவுகளில் கையகப்படுத்த வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.நிலமெடுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2088 கோடியே 92 லட்ச ரூபாயில், இதுவரை 1819 கோடியே 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது; இன்னும் 269 கோடியே 72 லட்ச ரூபாய் மீதமுள்ளது. மார்ச் 31க்குள் நிலம் முழுமையாக எடுக்கப்பட்டாலும், தனியாருக்குக் கொடுக்க தமிழக அரசு தயாராகயில்லை; இத்தகைய நிபந்தனைகளை ஏற்க மறுக்கிறது மத்திய அரசு. இதே நிலை எவ்வளவு காலம் நீடிக்கும்; விரிவாக்கம் எப்போது துவங்குமென்பதே விடை தெரியாத வேதனைக்குரிய கேள்வியாகவுள்ளது.
நிதி ஒதுக்கீடு; எப்போது...எவ்வளவு?
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு, தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள, 2,088 கோடி 92 லட்ச ரூபாயில், 2011-2016 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில், எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. கடந்த 2016-2021க்கு இடைப்பட்ட அ.தி.மு.க., ஆட்சியில் தான், 2018லிருந்து 2021 வரை, ரூ.573 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; மீதமுள்ள ரூ.1515 கோடி நிதி, கடந்த மூன்றாண்டுகளில் விடுவிக்கப்பட்டுள்ளது.