அப்போதும் குவிந்திருந்தது... இப்போதும் குவிந்துள்ளது...இனியும் குவியும். வேறென்ன... குப்பை தான்.காரணம் வேறல்ல...ஊழல் தான். முன்பு, துாய்மைப் பணி, மாநகராட்சி வசமிருந்தபோது, தற்காலிகப் பணியாளர் எண்ணிக்கை, குப்பை அள்ளும் டிரிப்கள் எல்லாவற்றிலும் பொய்க்கணக்கு காண்பிக்கும் ஊழல் நடந்ததால், குப்பை குவிந்தது. இப்போது தனியாரிடம் கொடுத்த பின்னும், அதே ஊழல் தொடர்கிறது.இன்னும் சொல்லப் போனால், முன்பை விட இப்போது நிலைமை மோசமாகியிருக்கிறது. வீதிகளின் நுழைவாயில்கள், ரோட்டோரம் என எங்கே பார்த்தாலும், மலை மலையாய் குப்பை குவிந்திருக்கிறது.குப்பைத் தொட்டிகள் அனைத்தும், அகற்றப்பட்டு விட்ட நிலையில், பெரும்பாலான பகுதிகளில், வீடு வீடாக குப்பை சேகரிக்கவும் ஆட்கள் வருவதில்லை; வந்தாலும் வாரம் இருமுறைதான் வருகின்றனர்.துாய்மைப்பணியை மேற்கொள்ளும் கான்ட்ராக்ட்களை, பெரும்பாலும் ஆளும்கட்சியினரின் பினாமிகள் எடுத்திருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.அவர்கள் வேலையே செய்யாமல், மாதந்தோறும் பணத்தை மட்டும் வாங்கிக் கொள்கின்றனர். அந்தத் தொகையில், அதிகாரிகள், கவுன்சிலர்கள் எல்லோருக்கும் பங்கும் கொடுத்து விடுகின்றனர். வீடுகளுக்கு குப்பை சேகரிக்க ஆட்கள் வராததால், மக்களே மூட்டை கட்டி வீசிச் செல்கின்றனர். கடைகளிலும் குப்பை சேகரிக்க, எந்தவொரு சிஸ்டமும் இல்லாததால், கடைகளின் குப்பை மூட்டைகள்தான் அதிகமாக இருக்கின்றன.ரோடு ரோடாகத் தோண்டித் தோண்டி, ஆய்வு செய்யும் மாநகராட்சி கமிஷனருக்கு, குப்பை மட்டும் ஏன் கண்ணில் படுவதில்லை என்று தெரியவில்லை.'துாய்மை பாரதத்துக்குள்ளே குப்பை நகரம்' என்று விருது வாங்கப் போகிறதா, 'ஸ்மார்ட் சிட்டி' எனப்படும் கோவை மாநகராட்சி?