உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு:வாரந்தோறும் பள்ளிகளில் நடத்த உத்தரவு

போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு:வாரந்தோறும் பள்ளிகளில் நடத்த உத்தரவு

பெ.நா.பாளையம்:பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் கலாசாரத்தை வேரறுக்க, வாரந்தோறும் காலை வணக்கக் கூட்டத்தில், போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு சார்ந்த தகவல்கள் இடம் பெற செய்ய, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி வளாகங்கள் அருகே புகையிலை மற்றும் போதை பொருள் விற்பனையை தமிழக அரசு தடை செய்துள்ளது.இதற்காக அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிகளில் இனிமேல் ஒவ்வொரு வாரமும், செவ்வாய்க்கிழமை காலை வணக்கக் கூட்டத்தில் ஆறு முதல் பிளஸ், 2 வகுப்பு வரையான மாணவர்களுக்கு போதை எதிர்ப்பு விழிப்புணர்வு சார்ந்த தகவல்கள், கவிதை, சுவரொட்டி, நாடகம், பாட்டு, திருக்குறள் கதைகளை கூற வேண்டும் என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.மேலும், தமிழகத்தில், 1 முதல், பிளஸ், 2 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கல்வி செயல்பாடுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், காலாவதியான ஆய்வக பொருள்களை முறைப்படி நீக்கம் செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள திறந்தவெளி கிணறுகள், கழிவு நீர் தொட்டிகள் மூடப்பட்டு, பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பழுதான நிலையில் உள்ள கட்டடங்கள் அருகே மாணவர்கள் அணுகாதபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்களில் உடைந்த கிளைகள் மற்றும் கட்டடங்களுக்கு இடையூறாக வளர்ந்துள்ள கிளைகளை அகற்ற வேண்டும். பெற்றோர்களை மாதந்தோறும் பள்ளிக்கு அழைத்து, மாணவர்களின் வருகை, உடல்நலம், மனநலம், கற்றல் அடைவு, விளையாட்டு உள்ளிட்ட பள்ளியின் அனைத்து நிகழ்வுகள் குறித்து எடுத்து கூற வேண்டும்.வாரம் ஒரு நாள் மாணவர்களின் மன நலன் சார்ந்து ஆலோசனை வழங்க வேண்டும்.இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களால் கண்டறியப்பட்ட அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும், பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளது.இது குறித்து, போலீசார் கூறுகையில்,' கோவை மாவட்டத்தில் இதுவரை நடந்த சிறப்பு அதிரடி சோதனையில், போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட, 66 நபர்கள் மீது, 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து, 93 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என்றனர்.

கண் துடைப்பு

போதை விழிப்புணர்வு என்பது வெறும் கண்துடைப்பாக உள்ளது என, சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில்,' தனியார் மற்றும் அரசு பள்ளிகளின் வளாகத்தில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் சிகரெட், புகையிலைச் சார்ந்த பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. இதை போலீசாரும் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் என, விதி உள்ளது. ஆனாலும், பெரும்பாலான பள்ளி, கல்லூரிக்கு அருகே சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன. போலீசார் கண்டும், காணாமல் உள்ளனர். துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், சின்ன தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒரு சில பள்ளிகளில் மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ