பொள்ளாச்சி;'பொள்ளாச்சி நகராட்சியில் தகுதி வாய்ந்த பொறியாளர்கள் இருந்தும், ஒரு விரிவான திட்ட அறிக்கையை (டி.பி.ஆர்.,) மதிப்பீடு செய்ய, தனியார் கலந்தாலோசகரை நியமித்து, மக்கள் வரிப்பணத்தை வீணாக்க வேண்டுமா,' என, கேள்வி எழுந்துள்ளது.பொள்ளாச்சி நகர், பாலக்காடு ரோட்டில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளி வளாகத்தில் பின்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 5 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து வசதிகளுடன் கூடிய 'ஸ்டேடியம்' அமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.இப்பணியை செயல்படுத்த கலந்தாலோசகர் நியமனம் செய்து, பணிக்கு தேவையான மதிப்பீடுகள் மற்றும் வரைபடங்கள் தயார் செய்து அறிக்கை சமர்ப்பிக்க, 8.80 லட்சம் ரூபாய் செலவினத்திற்கு ஒப்புதல் பெற, நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இதேபோல, மார்க்கெட் ரோட்டில் செயல்படும் கால்நடை சந்தையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக கால்நடை சந்தை வளாக அமைக்க, 6.03 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது. இதற்காகவும், ஒரு கலந்தாலோசகரை நியமித்து, விரிவான திட்ட அறிக்கையை மதிப்பீடு செய்ய, 9.90 லட்சம் செலவினம் ஒதுக்க, தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, தமிழக நகராட்சிகள் நிர்வாக இயக்குனர், 'கலந்தாலோசகரை நியமித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கக் கூடாது; அந்தந்த நகராட்சியில் உள்ள பொறியாளர்களைக் கொண்டே விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்,' என, அறிவுறுத்தியுள்ளார்.ஆனால், பொள்ளாச்சி நகராட்சியில் கலந்தாலோசகரை நியமித்து, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வது முரணாக உள்ளது.மக்கள் கூறுகையில், 'நகராட்சியில் தகுதி வாய்ந்த பொறியாளர், இளநிலை பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் உள்ளனர். அவ்வாறு, இருந்தும், விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய, மக்கள் வரிப்பணத்தை வீணாகப் பயன்படுத்துகின்றனர்.இது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தனியார் கலந்தாலோசிகரை நியமிக்கக் கூடாது என்ற அறிவுறுத்தல் இருந்தும், நகராட்சி நிர்வாகம் அலட்சிய போக்குடன் செயல்படுகிறது,' என்றனர்.