| ADDED : ஜன 12, 2024 12:03 AM
வால்பாறை;யானை வழித்தடம் ஆக்கிரமிப்பு குறித்து, ஓவியத்தின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்திய ஓவிய ஆசிரியருக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.வால்பாறையின் இயற்கை அழகை பாதுகாக்கவும், அரிய வகை வன விலங்குகளை பாதுகாக்கவும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.வால்பாறை இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சார்பில், யானை வழித்தடங்களை மீட்க வேண்டிய அவசியம் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியர் துரைராஜ் தத்ரூபமாக யானைகளின் படங்களை வரைந்துள்ளார்.ஓவிய ஆசிரியரின் இந்த செயலை பாராட்டும் விதமாக, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்னான், ஓவிய ஆசிரியர் துரைராஜை பாராட்டி, பரிசு வழங்கினார். பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.