| ADDED : பிப் 04, 2024 12:02 AM
கோவை:பாரதீய வித்யா பவன் கோவை மையம் சார்பில், விருதுகள் வழங்கும் விழா, பவன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கினார். கோபி கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறைத் தலைவர் மாணிக்கத்திற்கு தமிழ் மாமணி விருதையும், காரைக்குடி கம்பன் கழக செயலர் செல்ல கணபதிக்கு தமிழ்ப்பணிச் செம்மல் விருதையும், மையத்தின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் வழங்கி கவுரவித்தார். விழாவில், கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசும்போது, “பாரதீய வித்யா பவன் சார்பில், சமுதாயத்தில் பெரிய பணிகள் செய்தவர்களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருதுக்கு உரியவர்களுக்கு, உரிய நேரத்தில் விருதுகளை வழங்க வேண்டும். விருதுக்கு தகுதியானவர்களை, தமிழ் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். நமது அடையாளம் தமிழ்; அதை விட்டுவிட கூடாது,” என்றார்.நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.புரம் பவன் மெட்ரிக் பள்ளி முதல்வர் சங்கர், மாணிக்கத்தின் வாழ்த்து மடலையும், அஜ்ஜனுார் பள்ளி முதல்வர் மகேஸ்வரி, செல்ல கணபதியின் வாழ்த்து மடலையும் வாசித்தனர். அரசு கலைக் கல்லுாரி தமிழ்ப் பேராசிரியர் சுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, மாணவர்களின் இசைப்பாடல் நிகழ்ச்சி நடந்தது. கோவை மையம் விழாக் குழு உறுப்பினர் தண்டாயுதம் அனைவரையும் வரவேற்றார்.