உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்களிடம் விழிப்புணர்வு... உயர்ந்தது! குறைந்துவிட்டது குப்பை

மக்களிடம் விழிப்புணர்வு... உயர்ந்தது! குறைந்துவிட்டது குப்பை

தொண்டாமுத்தூர்:பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், பிளாஸ்டிக் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், கடந்த ஆண்டைவிட இந்தாண்டு குப்பையின் அளவு குறைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தென் கைலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர், பக்தர்களுக்கு கடந்த, பிப்., 12ம் தேதி முதல் அனுமதி அளித்திருந்தனர்.தொடர்ந்து, மூன்றரை மாதங்களுக்கு மேலாக, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து, ஏழு மலை ஏறி, சுயம்புவாக உள்ள ஈசனை தரிசித்து வந்தனர். கடந்த மே மாதம் 31ம் தேதியுடன், மலை ஏறுவதற்கான அனுமதி நிறைவடைந்தது.சுமார், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி வந்துள்ளனர். பக்தர்கள், பிளாஸ்டிக் குப்பைகளை வனப்பகுதியில் வீசிவிட்டு வந்துள்ளனர். வனத்துறையினர், தனியார் அமைப்புடன் இணைந்து, வெள்ளியங்கிரி மலையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.வனத்துறையினர் கூறியதாவது:தற்போது, முதல் மூன்று மலைகளில், முழுவதுமாக குப்பைகளை அகற்றி விட்டோம். நான்காவது மற்றும் ஐந்தாவது மலையில் குப்பை அகற்றும் பணி நடந்து வருகிறது. இப்பணி, இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவடையும். கடந்தாண்டு, வெள்ளியங்கிரி மலையில், 12 டன் குப்பை அகற்றினோம்.இந்த ஆண்டு, தற்போது வரை, 9 டன் குப்பை அகற்றி உள்ளோம். இன்னும், சுமார் அரை டன் குப்பை மட்டுமே அகற்றப்பட வேண்டியுள்ளது. வனத்துறை ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக, பிளாஸ்டிக் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், கடந்தாண்டை விட இந்தாண்டு. பிளாஸ்டிக் குப்பையின் அளவு குறைந்துள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ