ஆனைமலை;ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., பள்ளியில் புகையில்லா போகி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் புகையில்லா போகி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியர் கிட்டுசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் பூவிழி, மகாலட்சுமி, அறிவியல் ஆசிரியர்கள் கஜேந்திரன், ராஜேஸ்வரி ஆகியோர் பயன்படாத பொருட்களை எரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.ஆசிரியர்கள் பேசியதாவது:தைப்பொங்கல் பண்டிகை என்பது விவசாயம் சார்ந்தது. விவசாயத்தையும் விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் கால்நடைகளையும் போற்றி வணங்கும் பொங்கல் பண்டிகையை நாம் பாரம்பரியமாக கொண்டாடி வருகிறோம்.பொங்கலுக்கு முன் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நாம் போகி பண்டிகை கொண்டாடி வருகின்றோம்.வீடுகளில் சேகரிக்கப்பட்டுள்ள பழைய பொருட்களைத் தீயிட்டுக் கொளுத்துவதால், காற்றில் மாசு ஏற்பட்டு பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்த நிலையை மாற்ற, காற்றில் மாசு படாத அளவுக்கு பண்டிகை கொண்டாடலாம். போகி பண்டிகையன்று தீயிட்டு எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. மேலும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு புகையில்லா போகி கொண்டாட வேண்டும்.மேலும், பழைய பிளாஸ்டிக் பொருள், டயர், டியூப் போன்றவைகளை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். வாகன ஓட்டுநர்களும் புகையினால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.எனவே, பொதுமக்கள் தேவையற்ற பொருட்களை மறு சுழற்சிக்கு அனுப்ப வேண்டும். இதன் வாயிலாக சுற்றுச்சூழல் மற்றும் ஓசோன் பாதிப்படைவது குறைகிறது. மேலும், தனக்கு தேவையற்ற பொருட்களை தேவைப்படுவோருக்கு வழங்குவதன் வாயிலாக சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்.இவ்வாறு, அவர்கள் பேசினர்.புகையில்லா போகி குறித்து, விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, வினாடி - வினா, கவிதை மற்றும் ஓவிய போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.