| ADDED : ஜன 04, 2024 10:40 PM
மேட்டுப்பாளையம்: ஐயப்ப சேவா சமிதியின் சார்பில், ஐயப்ப சுவாமி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் காரமடை சாலையில் ஐயப்பன் கோவில் உள்ளது. ஐயப்ப சேவா சமிதியின், 64வது ஆண்டு விழா மற்றும், 33வது மண்டல மகோற்சவ திருவிழா கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் கோவிலில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் பட்டிமன்றம், பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை ஐயப்ப சுவாமிக்கு, 25 கலசங்களால் கலசாபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் பவானி ஆற்றங்கரை அருகே உள்ள மைதானம் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில், ஐயப்ப சுவாமி ஊர்வலம் வந்தது. ஊர்வலத்தில் கொம்பன் குழுவினரின் சிங்காரி மேளம், கதகளி மற்றும் வண்ண மயில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுவாமி ஊர்வலம் முன்பாக பெண்கள் தீபம் ஏந்தி சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஐயப்ப சேவா சமிதியினர் செய்திருந்தனர்.