வாகனத்தை முந்த முயன்ற வங்கி ஊழியர் விபத்தில் பலி
கோவை; திருநெல்வேலி மாவட்டம், பெருமாள்புரத்தை சேர்ந்தவர் பெசாலீல், 35. தேசியமயமாக்கப்பட்ட வங்கி உதவி மேலாளர். கோவை விநாயகபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று காலை பணிக்கு செல்வதற்காக, வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டு, விநாயகபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்., மைதானம் அருகே, முன்னால் சென்ற காரை முந்த முயற்சித்தார். அப்போது எதிரில் மற்றொரு பைக் வந்ததால், அதற்கு வழிவிட இடதுபுறம் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக, பைக் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் சரிந்தது. இதில் பெசாலீல் துாக்கி வீசப்பட்டார். அவருக்கு நெஞ்சுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.