| ADDED : ஜன 30, 2024 12:05 AM
கோவை;பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி, கோவையில் நேற்று துவங்கியது. வரும், 31ம் தேதி வரை நடக்கிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான 'பாரதியார் தின' கால்பந்து போட்டி, கோவையில் வேளாண் பல்கலை, பாரதியார் பல்கலை மற்றும் ராகவேந்திரா பள்ளி ஆகிய இடங்களில் நடக்கிறது. போட்டியை, கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், தருமபுரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், நீலகிரி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பெரியசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். மூத்த உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயகுமார், ஜேம்ஸ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். இப்போட்டியில், 38 மாவட்ட அணிகள் மற்றும் இரண்டு எஸ்.டி.ஏ.டி., (விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்) என, 40 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடந்த முதல் சுற்றுப்போட்டிகளில், நீலகிரி எஸ்.டி.ஏ.டி., அணி 6 - 0 என்ற கோல் கணக்கில் அரியலுார் அணியையும், திருவண்ணாமலை அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் புதுக்கோட்டையையும், தருமபுரி அணி 5 - 0 என்ற கோல் கணக்கில் கள்ளக்குறிச்சி அணியையும், சென்னை அணி 2 - 0 என்ற கோல் கணக்கில், சேலம் அணியையும் வீழ்த்தின.