| ADDED : ஜன 19, 2024 12:10 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, தரைமட்ட பாலம் கட்டியும் கழிவுநீர் இருபுறமும் தேங்கி நிற்பதால் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.பழநி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள், பொள்ளாச்சி பஸ்ஸ்டாண்டுக்குள் நுழையும் பகுதி அருகே, சாக்கடை பெரிய குழியாக உள்ளதால் விபத்துகள் ஏற்படும் சூழல் இருந்தது. மேலும், பஸ் ஸ்டாண்ட் எதிரே சாக்கடை கழிவு நீர் செல்லும் பகுதியும் குழியாக இருந்ததுடன், கழிவுநீர் அதிகளவு தேங்கி நின்றது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கடந்த மாதம் நகராட்சி சார்பில், தரை மட்ட பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.பாலத்தின் கீழ் பகுதி வழியாக கழிவுநீர் சென்று, பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கால்வாயில் இணைந்து வெளியேற்றும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால், தற்போது புதியதாக பாலம் கட்டியும் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படாத சூழல் உள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே, சாக்கடை பிரச்னைக்கு தீர்வு காண தரை மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. எனினும், பாலத்தின் இருபுறமும் கழிவுநீர் குட்டை போல தேங்கி நிற்பதுடன், கொசு உற்பத்தி மையமாக மாறுகிறது.மாலை நேரங்களில் கழிவுநீர் வழிந்து திறந்தவெளியில் செல்வதால் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர். மேலும், கழிவுநீரை மிதித்து செல்லும் நிலையே காணப்படுகிறது. பாலம் கட்டியும் இந்த பிரச்னைக்கு தீர்வு இல்லை என்பது வேதனையாக உள்ளது. பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கால்வாயை துார்வாரி மண் அகற்றி, கழிவுநீர் செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில், பழைய கால்வாயை அகற்றி புதியதாக கட்டி கழிவுநீர் செல்வதற்கு வசதி ஏற்படுத்தினால் மட்டுமே பயனாக இருக்கும்.இதுகுறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும். பாலம் பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.