உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நால் ரோட்டில் பஸ் நிறுத்தம்; போக்குவரத்துக்கு இடையூறு

நால் ரோட்டில் பஸ் நிறுத்தம்; போக்குவரத்துக்கு இடையூறு

இடையூறாக பஸ் நிறுத்தம்

உடுமலை பெதப்பம்பட்டி நால் ரோட்டில், வாகனங்கள் செல்ல முடியாதவாறு பஸ்சை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மோகன்குமார், உடுமலை.

சுரங்கப்பாதை ரோடு சேதம்

உடுமலை தளி ரோடு சுரங்க பாதையில் ரோடு மிகவும் பள்ளமாக உள்ளது. பள்ளத்தில் மழைநீரும் தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டுநர்கள் தவறுதலாக அடிக்கடி பள்ளத்தில் விடுகின்றனர். குண்டும் குழியான ரோட்டினால் வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்லும்போது திணறுகின்றனர்.- ராஜபாலன், உடுமலை.

சுகாதாரம் பாதிப்பு

உடுமலை அருகே பார்த்தசாரதிபுரம் அமராவதி பிரதான கால்வாய் கரையோரம் திறந்த வெளிக்கழிப்பிடமாக மாறி வருகிறது. அப்பகுதியில் குப்பைக்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுகிறது. மழை பெய்யும் போது கழிவுகள் கால்வாயில் கலக்கிறது. மேலும் திறந்த வெளிக்கழிப்பிடமாக அப்பகுதி முழுவதும் அசுத்தமாகியுள்ளது. இதனால் மிகுதியான துர்நாற்றமும் வீசுகிறது.- செந்தில்குமார், பார்த்தசாரதிபுரம்.

வாகனங்கள் ஆக்கிரமிப்பு

உடுமலை, கல்பனா ரோட்டில் நான்கு சக்கர வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. மற்ற வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பாதசாரிகள் நடப்பதற்கும் வழியில்லாமல் வாகனங்கள் வரிசை கட்டி நிறுத்தப்படுவதால், சிரமத்துக்குள்ளாகின்றனர்.- ஜெயந்தி, உடுமலை.

பயனில்லாத நிழற்கூரை

உடுமலை, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நிழற்கூரை பொதுமக்களுக்கு பயன்பாடில்லாத வகையில் கோடை வெப்பம், மழை சாரலும் விழும் வகையில் இருப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். பயணிகள் ரோட்டில்தான் பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நிழற்கூரையை சீரமைக்க வேண்டும்.- பாலமுருகன், உடுமலை.

போக்குவரத்து பாதிப்பு

உடுமலை, சந்தைரோட்டில் வாகனங்கள் ரோட்டின் பாதி வரை நிறுத்தப்படுகின்றன. சந்தைக்கு வரும் சரக்கு வாகனங்களும் ரோட்டை மறித்து நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்படுகிறது. காலை நேரங்களில் பள்ளிக்கு செல்வோர், பணிக்கு செல்வோரும் சந்தைரோட்டில் செல்வதற்கு நீண்ட நேரமாவதால் அவதிப்படுகின்றனர்.- ராஜேந்திரன், உடுமலை.

உபகரணங்கள் சேதம்

பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் ஆங்காங்கே குப்பையாகவும், விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்தும் உரிய பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி இதை கவனித்து விரைவில் சீரமைப்பு செய்ய வேண்டும்.- -செல்வா, பொள்ளாச்சி.

புதர் நிறைந்த கால்வாய்

கிணத்துக்கடவு, ஆர்.எஸ்., ரோட்டில் இருந்து சொலவம்பாளையம் செல்லும் ரோட்டின் ஓரத்தில், கழிவு நீர் செல்லும் கால்வாயில் மண் மற்றும் குப்பை அடைத்து காணப்படுகிறது. இதனால், மழை காலங்களில் ரோட்டில் நீர் வழிந்தோடுகிறது. கால்வாயை துார்வாரி கழிவுநீர் தேங்காமல் இருக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- மனோஜ், கிணத்துக்கடவு.

பழுதடைந்த தெருவிளக்கு

வால்பாறை அடுத்துள்ள, உருளிக்கல் மத்திய மருத்துவமனை செல்லும் ரோட்டில் தெருவிளக்கு எரிவதில்லை. இதனால், மக்கள் பலர் இவ்வழியில் பயணிக்க சிரமப்படுகின்றனர். நகராட்சி அதிகாரிகள் இந்த பிரச்னையில் கவனம் செலுத்தி, தெருவிளக்கை சரி செய்யவோ அல்லது புதிதாக மாற்றம் செய்யவோ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.-- -கிரண், உருளிக்கல் எஸ்டேட்.

அறுந்து தொங்கும் மின்கம்பி

பொள்ளாச்சி, 8வது வார்டு, அண்ணா நகர் 3வது தெருவில், மின் கம்ப ஒயர்கள் அறுந்து தொங்கிய நிலையில் உள்ளது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். இதை மின் துறையினர் கவனித்து விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- -வெங்கட், பொள்ளாச்சி.

வீணாகும் தண்ணீர்

கிணத்துக்கடவு, பள்ளிவாசல் வீதி, போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பொதுக்கிணற்றில் அதிகளவு தண்ணீர் மக்கள் பயன்படுத்த முடியாமல் வீணாக வெளியேறி செல்கிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வீணாகும் தண்ணீரை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.-- -ராம், கிணத்துக்கடவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி