பொள்ளாச்சி: தமிழக வேளாண் பட்ஜெட்டில், தென்னை மரங்களை காக்க எவ்வித அறிவிப்பும் இல்லாததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டத்தில், தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையில் பூச்சி தாக்குதல், தேங்காய்க்கு விலை இல்லை போன்ற பல்வேறு பிரச்னைகளால், விவசாயிகள் நிதி நெருக்கடிக்கு உள்ளாகி மன உளைச்சலில் உள்ளனர்.இந்நிலையில், தமிழக வேளாண் பட்ஜெட்டில், தென்னை விவசாயத்தை பாதுகாக்க முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என, விவசாயிகள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.ஆனால், வேளாண் பட்ஜெட்டில் தென்னையை காக்க எவ்வித அறிவிப்பும் இல்லாததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.வேளாண் பட்ஜெட் என்பதே விவசாயிகளுக்காகத்தான் என கூறும் தமிழக அரசு, கொங்கு மண்டலத்தை புறக்கணிப்பது போன்று, இங்குள்ள தென்னை விவசாயிகளை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளதாக அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் கூறியதாவது:கேரளா வேர் வாடல் நோய் பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டுவதை தவிர, வேறு தீர்வு இல்லை என வேளாண் பல்கலை மற்றும் வேளாண்துறையினர் தெரிவித்தனர். இதனால், மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. இதற்கு மானியம் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், பட்ஜெட்டில் இது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.டெல்டா மாவட்டத்தில், கால்வாய்களை துார்வார, 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பி.ஏ.பி., திட்டத்தில் உள்ள கால்வாய்களை துார்வார கோரிக்கை விடுத்தும் நிதி ஒதுக்கவில்லை.கரும்பு, நெல் என அனைத்து விவசாய பொருட்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆனால், கொங்கு மண்டலத்தில் பிரதானமாக உள்ள தென்னை விவசாயத்துக்கு மட்டும் எவ்வித சலுகையும் வழங்காதது ஏமாற்றமாக உள்ளது.இவ்வாறு, கூறினார்.