கடனை திருப்பித்தராததால் ஆத்திரம்; கத்தியால் குத்திய மூவர் மீது வழக்கு
கோவை; கடனை திருப்பி கொடுக்காத ஆத்திரத்தில், கடன் வாங்கியவரை கத்தியால் குத்தி, தாக்கிய மூவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.கோவை, கெம்பட்டி காலனி, விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பொன்ராஜ், 30. இவர் அதே பகுதியை சேர்ந்த அபி என்பவரிடம் ரூ.14 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.பணத்தை சில நாட்களில் திருப்பித் தருவதாக, பொன்ராஜ் கூறியிருந்த நிலையில், கடந்த 27ம் தேதி பொன்ராஜை போனில் அழைத்த அபி, ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு வருமாறு தெரிவித்தார்.பொன்ராஜ் அங்கு சென்ற போது, லாலி ரோடு, டாஸ்மாக் மதுக்கடை அருகில் அபி மற்றும் அவரது நண்பர்கள் இருவர் காத்திருந்தனர். பணம் குறித்து கேட்ட போது, பொன்ராஜ், அபி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அபி, தனது நண்பர்களுடன் சேர்ந்து பொன்ராஜை தாக்கினார். தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பொன்ராஜின் முகம், கைகளில் குத்தினார்.இதில் பலத்த காயமடைந்த பொன்ராஜ், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொன்ராஜ் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அபி உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.