| ADDED : ஜன 20, 2024 02:29 AM
கோவை:கோவை, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி துணை தலைவர் வினோத்குமாருக்கு வழங்கப்பட்டிருந்த கையெழுத்திடும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது சிக்கதாசம்பாளையம் ஊராட்சி. 2020ல் நடந்த ஊராட்சி தேர்தலில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி துணை தலைவராக வினோத்குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதற்காக, கவுன்சிலர்களுக்கு ரூ.1.50 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக, சில மாதங்களுக்கு முன், சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, கலெக்டர் கிராந்திகுமாரிடம், துறை ரீதியான நடவடிக்கைக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அதில், சமூக வலைதளத்தில் பரவிய வீடியோ உண்மையானது என்பது தெரியவந்தது.தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் - 1994ம் ஆண்டு சட்டப்பிரிவு 206-ன் கீழ் சட்டப்பூர்வமாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு, துணை தலைவர் வினோத்குமார் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என கூறி, மாவட்ட நிர்வாகம் நிராகரித்தது.மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை சுமத்தியுள்ள குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால், வினோத்குமாரின் இரண்டாம் நிலை கையொப்பமிடும் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இப்பொறுப்பை, காரமடை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (மண்டலம்-3) வழங்கி, கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டுள்ளார்.