- நிருபர் குழு-: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. * பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளித்தாளாளர் மாரிமுத்து, செயலாளர் ரவிச்சந்திரன், தலைமையாசிரியர் பிரகாஷ் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர்.மாணவர்களின் பேரணி, கலை நிகழ்ச்சிகள், கவிதை வாசிப்பு, நடனம், சிறுகதை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளித்தாளாளர், நல்ல நடத்தை, ஒழுக்கம், சமூக பொறுப்பு ஆகியவை குறித்து மாணவர்களிடம் பேசினார். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு, ஆரோக்கியம், முழுமையான வளர்ச்சி ஆகியவற்றில் பெற்றோர், ஆசிரியர்களின் கூட்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். * சோமந்துறை சித்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில், வாசிப்பு இயக்கத்தின் சார்பில், புத்தக கண்காட்சி நடந்தது. மாணவர்கள் பங்கேற்று புத்தகங்களை பார்வையிட்டு வாங்கிச் சென்றனர். ஒவ்வொரு வகுப்பறையும், ஒரு மரக்கன்று என்ற விதத்தில் ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பிடித்தமான பெயர்களை சூட்டி மாணவர்கள் மகிழ்ந்தனர். மரக்கன்றுகள் வளர்க்கும் வகுப்பறைக்கு பரிசு, கேடயம் வழங்குவதாக தலைமையாசிரியர் துரை மூர்த்தி தெரிவித்தார். மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் விதமாக கலை, இலக்கிய நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. தமிழாசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார். * சூலக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 52 குழந்தைகள், எட்டு ஆசிரியர்கள் உள்ளனர்.பள்ளியில் அரசு உத்தரவுப்படி, நல்விருந்து நிகழ்ச்சி நடந்தது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர் முகமது ேஷக் மொைஹதீன், நல் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். முன்னாள் ஊராட்சித்தலைவர்கள், தங்கம், அனுஷ்யா, துாய்மை பணியாளர்கள், குடிநீர் வினியோகிக்கும் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட, 100 பேருக்கு விருந்து பரிமாறப்பட்டது. * வால்பாறை நகரில் உள்ள காருண்யா சமூக சேவை மையத்தில் குழந்தைகள் தின விழா மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. காருண்யா சமூக சேவை இயக்குனர் சிஜிஜோஸ் தலைமை வகித்தார். திருஇருதய ஆலயத்திலிருந்து புறப்பட்ட பேரணியை திருஇருதய ஆலய பங்கு தந்தை ஜெகன்ஆண்டனி துவக்கி வைத்தார். தொடர்ந்து, சேவை மையத்தில் நடந்த விழாவில் ஒருங்கிணைப்பாளர் டெய்சி வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, சென்லுக் சர்ச் ஆலய பங்குதந்தை ஜோசப்புத்துார், இந்தியன் வங்கி மேலாளர் ஜெபசேகர், உபாசி மேலாளர் (ஓய்வு) பால்தேவநேசன் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினர். பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை காருண்யா சமூக சேவை மைய நிர்வாகிகள் செய்திருந்தனர். உடுமலை உடுமலை பள்ளபாளையம் ஸ்ரீ ஆதர்ஷ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், குழந்தைகள் தினத்தையொட்டி, மாணவ, மாணவியருக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. கலை நிகழ்ச்சியும் நடந்தது. *ஆ.அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், குழந்தைகள் தினத்தையொட்டி, மாணவ, மாணவியர் முன்னாள் பிரதமர் நேரு உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர். அவரது வரலாறு குறித்து பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடையே பேசினர். * குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. * ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல் பருவ தேர்வில், சிறந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பள்ளித்தலைமையாசிரியர் ராஜேஸ்வரி, ஆசிரியர் கண்ணபிரான் பரிசு வழங்கி பாராட்டினர்.