உள்ளூர் செய்திகள்

சிட்டி கிரைம்

வீட்டில் நான்கரை பவுன் கொள்ளை

கோவை: சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 63; ஓய்வுபெற்ற தபால்துறை ஊழியர். கடந்த, 31ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, வெளியூர் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த நான்கரை பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அவர் அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

ஓட்டலுக்குள் அனுமதிக்க தகராறு

கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில், கடந்த, 1ம் தேதி நள்ளிரவு, 1:30 மணியளவில் சிவபிரசாந்த் உள்ளிட்ட சிலர், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதிக்குமாறு கேட்டனர். இரவு, 12:00 மணிக்கு மேல் அனுமதி இல்லை என, ஓட்டல் ஊழியர்கள் மறுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. ஓட்டல் மேலாளர் பார்த்திபன், ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ரூ.70 ஆயிரம் கொள்ளை

கோவை: கணபதி போலீஸ் குவார்ட்டர்ஸ் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் பார்த்திபன். 29. கடந்த மாதம், 28ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் அன்னுாரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் மதியம் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டிலிருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கம், சில பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அவரது புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.* சிவானந்தபுரம் சிவசக்தி நகரை சேர்ந்த கருணாகரன் மகன் அக்சய், 22. கருணாகரன், வீட்டை ஒட்டியுள்ள பகுதியில், கடைகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில் உள்ள ஒரு அறையில், அக்சய் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் அக்சய், அறையை பூட்டி விட்டு அருகில் டீக்குடிக்க சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது, அறையில் இருந்த 'டிவி' லேப்டாப், ஸ்பீக்கர் மாயமாகி இருந்தன. புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

புகையிலை விற்ற இருவர் கைது

கோவை: இடையர்பாளையம் பகுதியில் கவுண்டம்பாளையம் போலீசார் நடத்திய சோதனையில் மளிகை கடையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தது. மளிகைக்கடை உரிமையாளர் இசக்கிமுத்து, 43 என்பவரை போலீசார் கைது செய்தனர். கவுண்டம்பாளையம் பகுதியில் நடத்திய சோதனையில், கார்த்திகை முருகன், 38 என்பவர் மளிகைக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் இருந்து, 20 பாக்கெட் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மது விற்ற 13 பேர் கைது

கோவை: வடவள்ளி, கவுண்டம்பாளையம், துடியலுார், போத்தனுார், குனியமுத்துார், சுந்தராபுரம், பீளமேடு, சரவணம்பட்டி, காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட, 13 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ