மொபைல் போன் திருடிய வாலிபர் கைது
கோவை கோவில்மேடு தவசி நகரை சேர்ந்தவர் தேவேந்திரன், 38. இவர் சாய்பாபா காலனி கே.கே., புதுாரில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவர், தனது ஓட்டல் டேபிள் மீது மொபைல் போன் வைத்திருந்தார். அப்போது அங்கு வந்த யாரோ, அவரது மொபைல் போனை திருடிச் சென்று விட்டார். தேவேந்திரன் புகாரின்படி, சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். அதில், மொபைல் போனை திருடியது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாரீஸ்வரன், 26, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மொபைல் போனை போலீசார் மீட்டனர். --பெண்ணிடம் நகை பறிப்பு
கோவை காளப்பட்டி ரோடு நேரு நகரை சேர்ந்தவர் சுகந்தி, 42. இவர் நேற்று முன்தினம் மாலை தனது மகளுடன் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மர்ம நபர், சுகந்தி கழுத்தில் அணிந்திருந்த, 7 பவுன் தங்க நகையை பறித்து தப்பி சென்றார். சுகந்தி புகாரின்படி, பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
சிங்காநல்லுார் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி அருகே, சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்திய, பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார், சோதனை செய்தனர். அதில் சுமார், 300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் இருந்தது. வாகனத்தை ஓட்டி வந்த பாலக்காடு கொடும்பு சென்னம்கோட்டை சேர்ந்த சிவதாசன், 45, என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், நீலிகோணம்பாளையம் பகுதி பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கேரளாவில் உள்ள கொடும்பு பகுதி ஓட்டல்கள் மற்றும் மளிகை கடைகளுக்கு, அதிக லாபத்திற்கு விற்பனை செய்தது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு
கோவை சித்தாபுதுாரை சேர்ந்தவர் முகேஷ், 33; தனியார் நிறுவன ஊழியர். இவர் மொபைல் போன் வாங்க, மனைவி, குழந்தைகளுடன் காந்திபுரம் சென்றார். மொபைல் போனை வாங்கி விட்டு மனைவியையும், குழந்தையையும் கால் டாக்ஸி மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். கார் சென்று கொண்டிருந்த போது, குழந்தை சிறுநீர் கழிப்பதற்காக காரை நிறுத்தி உள்ளனர். வீட்டிற்குள் சென்று பர்சை பார்த்த போது, அதில் இருந்த ரூ.50 ஆயிரம் காணாமல் போயிருந்தது. முகேஷ் பு-காரின்படி, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் அபுர்பா பிஸ்வால், 22; கட்டட தொழிலாளி. இவர் கோவையில் தங்கி இருந்து ராமநாதபுரத்தில் நடைபெற்று வரும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் ஒலம்பஸ் அருகே சிமென்ட் கலக்கும் இயந்திரம் மீது நின்று, பணிபுரிந்து கொண்டு இருந்தார். அப்போது அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் வயர் அவர் மீது பட்டது. மின்சாரம் தாக்கி அபுர்பா பிஸ்வால் துாக்கி வீசப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். ராமநாதபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.