மேட்டுப்பாளையம் : 'வயல் வரப்பில் பேரீச்சம் பழ மரம் வளர்த்தால் நல்ல வருவாய் கிடைக்கும்' என்று, விவசாயிகள் தெரிவித்தனர்.பாலைவனத்தில் மட்டுமே விளையும் என்று கருதப்படும் பேரீச்சம் பழ மரம், இன்று வயலிலும் நன்கு விளைகிறது. ஒரு மரத்தின் மூலம் ஆண்டுக்கு 7,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வயல் வரப்புகளிலும், வீடுகளிலும் உள்ள காலியிடங்களிலும் பயிர் செய்தால் நல்ல வருவாய் கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள்.பாலப்பட்டி விவசாயி ரங்கராஜ் கூறியதாவது:பேரீச்சம் பழ மரங்களை தோப்பாகவும் பயிர் செய்யலாம், தனி மரமாகவும் வளர்க்கலாம். தோப்பாக பயிர் செய்தால் ஆரம்ப காலத்தில் நன்கு பராமரிக்க வேண்டும்.
விவசாய தோட்டங்களின் வரப்பில் பயிர் செய்தால், அதற்கு என்று தனியாக பராமரிப்பு வேண்டியதில்லை. மரமாகும் வரை மற்ற பயிர்களை பராமரிக்கும் போது இதையும் பராமரித்தால் போதும். வயல் வரப்பில் இடைவெளி விட்டு நட்டால், மற்ற பயிர்களுக்கு இதன் நிழல் பாதிப்பை ஏற்படுத்தாது. பேரீச்சம்பழ மரம் நட்ட 6,7வது ஆண்டில் காய் பிடிக்கத் துவங்கிவிடுகிறது. அதன் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மரத்தில் காய் பிடித்துக் கொண்டிருக்கும். ஜனவரி, பிப்ரவரி மாதம் பூ பூக்கும். ஜூன், ஜூலை மாதத்தில் காய் பிடித்து ஆகஸ்டில் அறுவடைக்கு வரும் ஒரு மரத்துக்கு 50 லிருந்து 100 கிலோ வரை காய் பிடிக்கும். நன்கு முற்றி பழமாகிய பின்பு அறுவடை செய்தால், சுவை நன்றாக இருக்கும். பச்சை பேரீச்சம் காயை டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிலோ 50 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கின்றனர். நன்கு முற்றிய பழம் கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒரு மரத்தின் மூலம் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். தோப்பாக வைத்தால் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும். காய் நன்கு முற்றும்போது வவ்வால் உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் சேதம் ஏற்படுத்தும். இதைத்தடுக்க காயின் குலையை சுற்றி வளை கட்ட வேண்டும். எனவே விவசாயிகள் இதை வயல் வரப்பில் நட்டால் கூடுதல் வருவாய் கிடைக்கும்.இவ்வாறு, விவசாயி ரங்கராஜ் கூறினார்.இதுகுறித்து விவசாயி சுசீலா கூறுகையில், ''வீட்டின் பின் பகுதியில் பேரீச்சம் பழ மரத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக வளர்த்து வருகிறேன். பத்துக்கும் மேற்பட்ட குலைகள் தள்ளியுள்ளன. ஒவ்வொரு காயும் பெரிய அளவில் உள்ளதால் கூடுதல் மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வீட்டின் பின் பகுதியில் காலியிடம் உள்ளவர்கள் பேரீச்சம் பழ மரம் நட்டால் நல்ல வருவாய் கிடைக்கும்,'' என்றார்.