உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோதவாடி குளத்துக்கு நொய்யல் ஆற்று நீரை திருப்பி விட வலியுறுத்தல்

கோதவாடி குளத்துக்கு நொய்யல் ஆற்று நீரை திருப்பி விட வலியுறுத்தல்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அடுத்துள்ள கோதவாடி குளத்திற்கு, கோவை நொய்யல் ஆற்று தண்ணீரை திருப்பி விட கோவை கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிணத்துக்கடவில் இருந்து ஐந்து கி.மீ., தூரத்தில் கோதவாடி உள்ளது. இங்கு 360 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய குளம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெய்யும் பருவமழையால், குளம் நிறைந்து விடும்.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கிணத்துக்கடவு மற்றும் மேற்கு பகுதிகளில் தொடர்ந்து மூன்று மாதம் இடைவிடாது மழை பெய்தது. இம்மழை இக்குளத்திற்கு சென்றதோடு, உபரி நீர் கோதவாடி வழியாக நல்லட்டிபாளையம், பட்டணம், முள்ளுப்பாடி, சூலக்கல், தாமரைக்குளம் சென்றது.இதனால், கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில் உள்ள 72 கிராமங்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வந்தது.

விவசாயிகளும் சிரமம் இன்றி விவசாயம் செய்து வந்தனர்.தற்போது இக்குளம் நிறைந்து 20 ஆண்டுகளுக்குமேலாகி விட்டது. அதற்கு பின், மழையும் குறைந்தால், குளத்திற்கு தண்ணீர் வரவில்லை. இதனால், 2003ல் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டன. ஆனால், கோதவாடி குளத்தை சுற்றிலும் இருந்த தோப்புகள் மட்டும் வாடாமல் இருந்தன.சிறிதளவு தண்ணீர் இருந்து கொண்டே இருந்ததால், தோப்புகள் தப்பின. இதற்கு பின், பி.ஏ.பி., தண்ணீர் விடவேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து குரல் கொடுத்தனர்.ஆனால், பி.ஏ.பி., தண்ணீர் குளத்திற்கு விடவில்லை. நன்றாக மழை பெய்யும் போது, கோவை நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணாக, சாயம் கலக்கும் திருப்பூர் பகுதிக்கு செல்கிறது.

இதனை கோதவாடி குளத்திற்கு திருப்பி விட பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்தும் செவி சயிக்கவில்லை.இவ்வாறு கோதவாடி குளம் கவனிப்பாரற்று விட்டதால், நிலங்கள் கூட ஆக்கிரமிப்பில் சிக்கியது. இக்குளம் பொதுப்பணித்துறை, மின்வளத்துறை, வனத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.இக்குளத்தில் உள்ள தண்ணீரில் மின்வளத்துறையினர் மீன்களை வளர்த்து வருகின்றனர். வனத்துறையினர் சுற்றிலும் மரங்கள் வைத்து வருகின்றனர். இதனை முறையாக பராமரிப்பு செய்யவேண்டிய பொதுப்பணித்துறை கண்டும் காணாமல் இருந்து வருகிறது.இதனை காப்பாற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்குளத்திற்கு பி.ஏ.பி., மற்றும் நொய்யல் ஆற்று உபரி நீர் விடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ