கோவை : 'ஓட்டல்கள், கடைகள், தனியார் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவது அதிகரித்து வருவதால், அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என மக்கள் மையம் சார்பில், கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் தினம் நடந்தது. இலவச வீட்டுமனைப் பட்டா, ஓய்வூதிய தொகை, வேலை வாய்ப்பு விண்ணப்பம் உள்ளிட்ட ஏராளமான மனுக்களை கலெக்டர் கருணாகரன் பெற்றார்.மக்கள் மையம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், அதன் தலைவர் கோவிந்தராஜ் கூறியுள்ளதாவது: கோவை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் பெருகி வருகின்றனர். கொத்தடிமை முறை, பள்ளி இடை நிற்றல் முறையும் அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகள், கடைகள், ஓட்டல்கள், வீடுகளில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது இன்னும் தடுக்கப்படாமலே உள்ளது. இதனால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஏழை குழந்தைகளே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குழந்தை தொழிலாளர்களாக பணியில் சேரும் இவர்கள், தகாத சகவாசம் காரணமாக, போதை பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். மாவட்டத்தில் பன்னிமடை, காருண்யா நகர், திப்பனூர், கண்ணப்ப நகர், நாகராஜபுரம், பிள்ளையார்புரம், ஸ்ரீமுருகன் நகர் ஆகிய பகுதிகளில் மட்டுமே குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கோவை குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சங்க அலுவலகத்தில் போதுமான பணியாளர்கள் இல்லாததால், குழந்தை தொழிலாளர்கள் பெருகுவதை தடுக்க முடியவில்லை. சுமங்கலி திட்டம் எனும் பெயரில் வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்படும் ஏழை இளம் பெண்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து பாதுகாப்பற்ற இடங்களில் தங்க வைக்கின்றனர். பாலி யல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குகின்றனர். அதிக நேரம் பணிபுரியாவிட்டால் அடித்து உதைக்கின்றனர். போதுமான உணவு, உடை கொடுக்காமல் கொத் தடிமைகளாக நடத்துகின்றனர். இதனால் மர்மமான முறையில் ஏழை பெண்கள் இறப்பது வெளியில் தெரியாமல் மறைக்கப்படுகிறது. இவற்றை தடுத்து நிறுத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கோவிந்தராஜ் கூறியுள்ளார்.