| ADDED : ஆக 03, 2011 01:17 AM
சூலூர் : நெசவுக்கூலியை நூறு சதவீதம் உயர்த்தி தர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், அதன் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 2008ம் ஆண்டு ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கூலி உயர்வு குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டது. தற்போது உள்ள விலைவாசி உயர்வு, தொழிலாளர் சம்பள உயர்வு உள்ளிட்டவற்றாலும், கூலி உயர்வு வழங்கப்பட்டு மூன்று ஆண்டு முடிவுற்றதாலும் கூலியை நூறு சதவீதம் உயர்த்தி தரவேண்டும். இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டும் சாதகமான பதில் இல்லை. தறி உதிரிபாகங்கள் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அதிகரிக்கும் போக்குவரத்து செலவு உள்ளிட்டவற்றை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகிறோம். இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பேசி, நெசவுக்கூலியை நூறு சதவீதம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.